எல்லாம் நன்மைக்கே

hopeமகத நாட்டு மன்னன் ஒருவன் தனது அமைச்சருடன் வேட்டைக்குச் சென்றான்… வில்லை எடுத்து.. அம்பைப் பொருத்தி நாணை இழுக்கையில்.. அவன் கட்டை விரல் துண்டாகிக் கீழே வீழ்ந்தது.

இதைக் கண்ட அமைச்சர், ‘மன்னா..கவலை வேண்டாம்.எல்லாம் நன்மைக்கே’ என்றார்.

தன் விரல் போனதை, அமைச்சர் ‘நன்மைக்கே’ என்றதால் கோபமுற்ற மன்னன், அந்த அமைச்சரை சிறையில் அடைத்தான்.

சில நாட்கள் சென்றன..

இம்முறை மன்னன்..தனியாக வேட்டைக்குச் சென்றான்.அப்போது அங்கு இருந்த காட்டுவாசிகளிடம் சிக்கினான்.அவர்கள் தங்களது எல்லை சாமிக்கு நரபலி கொடுக்க ஒரு மனிதனைத் தேடிக் கொண்டு இருந்தார்கள்.மன்னனைக் கண்டதும், அவரை, நரபலி கொடுக்க சிறை பிடித்தனர்.

மன்னனை, குளிப்பாட்டி, சந்தனம் பூசி, பலி பீடத்திற்கு அழைத்து வந்தனர்.அப்போது..அக் காட்டுவாசிகளின் தலைவன், மன்னனுக்கு, கட்டை விரல் இல்லாததைப் பார்த்து, “ஊனமுள்ளவரை பலி கொடுப்பது வீண்’ என்று கூறி மன்னனை விடுவித்தான்.

அப்போது மன்னனுக்கு அமைச்சர் சொன்னது நினைவிற்கு வந்தது..’எல்லாம் நன்மைக்கே’

ஆம்..அன்று விரல் போனது, நல்லதற்கே.இல்லையேல், இன்று உயிர் போயிருக்குமே..என எண்ணியவன்..ஊருக்கு வந்ததும் , அமைச்சரை விடுவித்தான்.

இது கதைதான் என்ற போதிலும் பல நேரங்களில் நமக்கு ஏற்படுகின்ற துன்பமானது நமது நன்மைக்காகவே நிகழ்கின்றன என்பதே உண்மை.

டெஹ்ராடூன் மலை முகட்டில் நின்று கொண்டு, கீழே தெரியும் ஏரியைப் பார்த்தார், தோல்வி அவரை துன்புறுத்திக்க்ண்டிருந்தது. அதுவும் சாதாரணத் தோல்வியா? இந்த நேர்முகத் தேர்வில் மொத்தம் 8 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது தெரியும்.எட்டு இடங்களுக்கு மொத்தம் 25 பேர் போட்டியிட்டார்கள்.

எங்கோ இந்தியாவின் தென்கோடிமுனை கிராமத்திலிருந்து, வடக்கே டெஹ்ராடூன்வரை இதற்காகவே பயணம் செய்து வந்திருந்தார். எப்படியும் தனக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்று ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை.அதற்கேற்ப நேர்முகத் தேர்வும் கடினமாக இல்லை.இன்னும் சிறிது நாளில் தானும் விமானி ஆகிவிடுவேன் என்கிற கனவு.

ஆனாலும் அவருக்கு 9வது இடம் தான் கிடைத்தது.அவர்களுக்கு தேவையோ 8 பேர் மட்டுமே.தன்னுடைய இழப்பை நினைக்க நினைக்க அவருக்கு வேதனையாக இருந்தது.விமானியாக உலகை சுற்றலாம், தேச சேவைக்காக தன்னுடைய பங்கை செலுத்தலாம் என்ற கனவு கனவாகவே ஆனது.

பிறகு டெல்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஓர் ஆராய்ச்சிப் பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது.ஒருவேலை டெஹ்ராடூனில் அவருக்கு விமானப்படை வேலை கிடைத்திருந்தால் வானத்தை அளந்திருப்பார். அதன்பிறகு எல்லா அரசு அதிகாரிகளையும்போல் நாற்பது வருட சம்பளம் வாங்கி ஓய்வுபெற்று ஓய்வூதியத்திற்காக காத்திருந்திருப்பார்.

அந்த ஒரு தோல்வி அப்துல் கலாமை இந்திய ராணுவம் வின்வெளி ஆராய்ச்சி என்று பல துறைகளில் அற்புதமான பங்களிப்பை செய்யவைத்து குடியரசுத் தலைவராகவும் ஆக்கிற்று.

உஹது போர்க்களத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தலைமையில் மக்கத்து காஃபிர்களுடன் போர் நடந்தது. அல்லாஹ்வினுடைய தூதரே தலைமையேற்று நடத்தினார்கள். இருந்த போதினும் தோல்வியே கிட்டியது.அதுமட்டுமின்றி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உஹது போர்க்களத்திலே கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்னும் வதந்தி பரவியது.

தங்கள் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று தெரிந்தால் ஸஹாபாக்கள் எப்படி துடித்திருப்பார்கள் என்பதை சற்று சிந்தித்துபாருங்கள் சகோதரர்களே.ஆனால் அந்த வதந்தி துன்பமாய் மாறி முஸ்லிம்கள் உஹது போர்க்களத்திலே பெற்ற தோல்வியை மறக்கச் செய்தது அல்லவா.

முஹம்மது நபி (ஸல்) கொல்லப்பட்டு விட்டார்களே என்ற ஒரே கவலை தான் அப்போது இருந்தது. அந்தக் கவலையைப் போக்கும் விதமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ள செய்தி கிடைத்தவுடன் பெரும் உத்வேகம் பெற்று மீண்டும் வெற்றி வாகை சூடினார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதை இறைவன் பின்வரும் வசனத்தில் நமக்கு விளக்குகின்றான்.

(நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

-அல் குர் ஆன்(3:153)

மனக் கவலையில் ஆழ்ந்திருப்பவர்களையும், மனநோய்க்கு ஆளானவர்களையும் குணப்படுத்த கற்பனையான, அதை விடப் பெரும் கவலையை அவர்களுக்கு ஏற்படுத்த மருத்துவர்கள் முயற்சிப்பார்கள். இவ்வாறு பெரும் கவலை ஏற்படுத்திய உடன் ஏற்கனவே இருந்த சிறிய கவலைகள் மறைந்து விடும். பெரும் கவலை மட்டுமே முழு உள்ளத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். கற்பனையாக ஏற்படுத்திய கவலையை கற்பனை எனப் புரிய வைத்தால் அனைத்துக் கவலைகளிலிருந்தும் அவர் விடுபட்டு குணமடைந்துவிடுவார் என்பது அறிவியல் உண்மை.

ஆக உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பம் யாவும் உங்கள் நன்மைக்காகவே என்பதை புரிந்து வாழ்க்கையை முன்னெடுத்து செல்லுங்கள் சகோதரர்களே..

– முஹம்மது சிராஜுத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *