அல்லாஹ் நாடினால் …

insha_allahகுறைஷிகளுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது நல்ல அபிப்பிராயமே இருந்தது. ஆனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மட்டும் விரும்பவில்லை. அதற்கு காரணமும் இருந்தது. ஏனெனில் குறைஷிகளின் முக்கிய வருமானம் கஃபாவிற்கு வரும் யாத்ரீகர் கூட்டத்தை நம்பியே இருந்தது. ஆனால் முஹம்மதோ கஃபாவில் இருக்கும் அனைத்து சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார். பிறகு கஃபாவிற்கு எப்படி கூட்டம் வரும், மேலும் தமது வருமானமும் தடை பட்டுவிடுமே என்கிற அச்சம் உச்சத்தில் இருந்தது. ஆகவே அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பொய்யர் என் நிரூபிக்க முடிவு செய்தார்கள்.

யூத மத குருமார்களான ரபிக்களின் உதவியை நாடினார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களை பரிசோதிக்க மூன்று வினாக்களை அவரிடம் கேட்கச் சொல்லி குறைஷிகளிடம் சொல்லி அனுப்பினார்கள்.”இதுதான் பரீட்சை. இந்த மூன்று கேள்விகளுக்கும் அந்த முஹம்மது என்ன பதில் தருகிறார் என்று கேட்டு வந்து சொல்லுங்கள். அவர் சொல்லும் பதில்கள் சரியானவையாக இருக்குமானால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் இறைத்தூதர்தான் என்று நீங்கள் நம்பலாம். பதில்கள் சரியில்லை என்றால், அவர் பித்தலாட்டக்காரர்தான் என்பதில் சந்தேகமில்லை” என்று சொன்னார்கள்.

  • ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்?அவர்களின் பின்னணி என்ன?
  • கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார்? அவரது சிறப்பு என்ன?
  • ஆன்மா என்பது என்ன?

முதல் இரு வினாக்களுமே சரித்திரம் தொடர்பானவை. அப்புறம், இருக்கவே இருக்கிறது ஆன்மா. இன்றைக்கு வரை அது என்ன என்கிற வினாவும், அதற்கான விடைதேடும் ஞானியரும் இருக்கவே செய்கிறார்கள்.

தம்முன் வைக்கப்பட்ட வினாக்களுக்கு மறுநாள் விடை சொல்லுவதாகச் சொல்லி, வந்தவர்களை அனுப்பிவைத்தார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். விபரீதம் இங்கேதான் வந்தது. அதெப்படி அத்தனை உத்தரவாதமாக, மறுநாள் விடை தருவதாகச் சொல்லிவிடமுடியும் ?

அடுத்த பதினைந்து நாட்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரவேயில்லை. கேள்வி கேட்ட குறைஷிகள் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள். மிகவும் வருத்தமுற்றாலும், தன் இறைவன் ஒருபோதும் தன்னைக் கைவிடமாட்டான் என்பதில் மட்டும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தீராத நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

அந்த நம்பிக்கைதான் ஜிப்ரீல் (அலை) அவர்களை வரவழைத்தது என்று சொல்லவேண்டும்.  மறுநாளே பதிலளிப்பதாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னது தவறு என்று கடிந்துகொள்ளும் விதத்தில் ஓர் இறைவசனமே முதலில் வந்தது.

(நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் “நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று நிச்சயமாக கூறாதீர்கள். “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; இன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக!

– (அல் குர் ஆன் 18:23,24)

அதன் பிறகே மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.

– முஹம்மது சிராஜுத்தீன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *