வெளிநாட்டு வாழ்க்கை

2சமீர் – நாகை மாவட்டத்தை சேர்ந்த சராசரி முஸ்லிம் இளைஞன். கேட்டரிங் முடித்துவிட்டு துபாயில் வேலை. சுமாரான சம்பளம். இவனது சம்பளத்தை வைத்து ஊரில் குடும்பம் நல்லபடியாக சென்றுகொண்டிருந்தது. திருமணம் முடிந்து ஐந்து வருடம் கடந்திருந்தது. திருமணம் என்னவோ பெற்றோர் பெண் பார்க்க தான் நடந்தது. ஆனால் காதலித்திருந்தால் கூட இதுபோல மனைவி அமைந்திருக்குமா என அடிக்கடி அவன் நினைப்பதுண்டு. இவர்களின் காதலுக்கு சாட்சியாக ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

வழக்கம் போல் அதிகாலை இவன் வேலைக்கு தயாராகிக்கொண்டிருந்தான். ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு, ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு வருகிற நேரமில்லை இது. உடல்நிலை சரியில்லாத தன் தந்தைக்குத்தான் எதுவும் பிரச்சனையோ என தொலைபேசி அழைப்பை எடுத்தான். ஆனால் செய்தி அதைவிட அதிர்ச்சியாய் தாக்கியது. ஆம் வாழ்நாளில் இவன் ஒரு நாளும் எதிர்பார்த்திடாத செய்தி.

மறுமுனையில் தாய் அழுதவாறே கதறினால் “உன் பொண்டாட்டி உனக்கு மோசம் பண்ணிடாடா”.

மருத்துவரை பார்த்துவிட்டு சென்னையிலிருந்து விடிகாலை திரும்பி வந்த பெற்றோர் தனது மருமகள் வீட்டு கார் டிரைவருடன் தனியாக இருந்ததாய் சொன்னார்கள். இவனுக்கு செய்தி  வருவதற்கு முன்பாக இவன் பெற்றோர் செய்த கலேபரத்தில் ஊருக்கெல்லாம் தெரிந்து தொலைபேசி மூலம் துபாயில் வசிக்கும் இவனது நன்பர்கள் மற்றும் ஊர்காரர்களுக்கும் தெரிந்துவிட்டது.

இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில் தொலைபேசி அழைப்பு குவிய ஆரம்பித்தது. ஆறுதல் சொல்லி சில, ஆறுதல் சொல்வதாய் வெறுப்பேற்றின சில. பேசுபவர்கள் அனைவரும் மறக்காமல் இவனது மனைவியை வசைமாரி பொழிந்து தள்ளினர்.

“நாம் இப்படி நாய் படாதபாடுபட்டு குடும்பத்தை விட்டு சம்பாதித்து அனுப்பினால் இப்படி அறிப்பெடுத்து அலைகிறாள்கள்” என ஒட்டுமொத்தமாய் பெண் இணத்தையே வசைமாறி பொழிந்தார்கள் சக நண்பர்கள். மொத்தத்தில் இவை அனைத்தும் இவனுக்கு மனைவியின் மீது தீராத கோபத்தையே ஏற்படுத்தின.

கோபத்தின் உச்சியிலிருந்த அவனுக்கு தொலைபேசியில் தனது மனைவியை அழைத்து தலாக் சொல்லிவிடலாமா என தோன்றிற்று. இல்லை ஒழுக்கம் கெட்டவளோடு பேச வேண்டிய அவசியமில்லை என்று முடிவெடுத்து கடிதம் எழுதினான் “தலாக் தலாக் தலாக்”.

நண்பர்கள் மூலம் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு தனியாய் நடக்க ஆரம்பித்தான் கடற்கரை நோக்கி. கடற்கரையில் அமர்ந்த அவனுக்கு பழைய நினைவுகள் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்தன.

திருமணம் முடிந்து சரியாய் ஒரு மாதம் கழித்து துபாய் கிளம்பிவிட்டான். மனைவிக்கு இவனை பிரிய மனமே இல்லை. ஆனால் சம்பாதிக்க சென்றாக வேண்டுமே. இரு வருடம் கழித்து மீண்டும் ஒரு மாதம் மனைவியுடன். ஆறு மாதம் கழித்து மனைவி கற்பமாய் இருப்பதாய் சொன்னாள். எப்படியாவது பிரசவத்திற்கு வந்துவிடுங்கள் என்றவளுக்கு பிள்ளைக்கு பெயர் அனுப்பிவைத்தான். மூன்று வருடங்கள் ஓடிவிட்டன இதுவரை பெற்ற பிள்ளையைக் கூட நேரில் பார்த்ததில்லை.

கார் வாங்கிய புதிதில் நான் கார் ஓட்ட கத்துக்கொள்கிறேன் என கேட்டாள். ஒத்துக்கொள்ளாமல் இவன் தான் டிரைவரை சம்பளத்திற்கு அமர்த்தினான். இன்று அந்த டிரைவராலேயே வந்தது பிரச்சனை. கோபம் சற்று குறையத் துவங்கியது. சிந்திக்க ஆரம்பித்தான். இது நாள் வரை பணத்திற்காக வாழ்க்கையை அல்லவா தொலைத்து நிற்கிறோம் என தோன்றியது. கிலாபத் ஆட்சியில் சிறை கைதிகள் கூட நாம் மனைவியை பிரிந்தது போன்று இத்தனை நாட்கள் பிரிந்ததில்லையே ? மனைவி தவறு செய்தாலா அல்ல நாம் தவறு செய்ய வைத்தோமா என எண்ணத் துவங்கினான். தீர்க்கமான முடிவுடன் புறப்பட்டான்.

முதலில் அந்த தலாக் கடிதத்தை கிழித்துவிட்டு வேலையை விடுவதாய் அறிவித்துவிட்டு இந்தியா பயணமானான். நேராக மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை சந்தித்தான். மனைவி அழுது கொண்டிருந்தாள் ஆனால் மனைவியின் பெற்றோறோ அபாண்டமாக பழி சுமத்திவிட்டார்கள் என இவனது தாயை திட்டினார்கள். பெற்ற பிள்ளையோ அருகில் வர பயந்தது.

மனைவியை தனியாக அழைத்து விசாரித்தான். மனைவி அழுதவாறே தவறு செய்ததை ஒப்புக்கொண்டாள். மன்னிப்பும் கேட்டாள். இனி இப்படி நடக்காது என வாக்குறுதி கொடுத்தாள். இனி இப்படி நடக்க விடமாட்டேன் என சொல்லியவாறு மனைவியுடன் புறப்பட்டான்.

பெற்றோரை சமாதானப் படுத்தினாலும் ஊர் வாயை மூட முடியாது என உணர்ந்து மனைவியுடன் சென்னை புறப்பட்டு சேர்த்து வைத்த பணத்தில் சிறியதாய் ஒரு உணவகம் ஆரம்பித்து தனது புது வாழ்க்கையை துவங்கினான்.

– முஹம்மது சிராஜுத்தீன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *