வஹ்ஷீ

eediபத்ருப்போர் – வெறும் 313 நபர்களே கொண்ட முஸ்லிம்களின் படை 1000 நபர்களுக்கு மேலுள்ள குறைஷிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதில் பங்கெடுத்த முக்கியமான ஸஹாபிகளில் ஒருவர் ஹம்ஸா (ரலி) அவர்கள். நபியவர்களின் சிறிய தந்தை. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த ஆரம்பகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரில் இவரும் ஒருவர்.

அல்லாஹ்வின் உதவியால் முஸ்லிம்கள் குறைஷிகளை வென்றார்கள். இப்போரில் இணைவைப்பாளர்களில் முக்கியமானோர்களாகிய அபூஜஹ்ல், ஸைபா, வலீத், உத்பா கொலை செய்யப்பட்டனர். தனது தந்தை உத்பாவின் மரணத்தை கண்ணுற்ற ஹிந்தா கோபத்துடன் சபதமிட்டாள் “என் தந்தையை கொன்ற ஹம்ஸாவை கொன்று ஈரலைப் பிடுங்கி பற்களால் கடித்து துப்புவேன்”.

தன் சபதத்தை நிறைவேற்றுவதற்காக குறி பார்த்து ஈட்டி எறிவதில் தேர்ந்த வஹ்ஷீ என்னும் அடிமையை தேர்ந்தெடுத்தாள். முஸ்லிம்களை பழிவாங்க துவங்கப்பட்டது மற்றோரு போர். உஹது போர். இந்தப் போரில் வஹ்ஷீ எந்தவொரு முக்கியமான செயலிலும் ஈடுபடவில்லை. ஒரே ஓர் இலக்கு. அதை அடைந்தால் தனக்கு விடுதலை. அந்த எண்ணம் மட்டுமே நெஞ்சம், தலை, கை கால் என்று உடல் முழுக்க வியாபித்திருந்தது. எனவே படையினர் மற்றவருடன் கலந்துகொள்வதோ, அந்த ஆரவாரத்தில் பங்கெடுப்பதோ இல்லாமல் அமைதியாய் மதீனாவின் பாதையை நோக்கி கண்கள் நிலைகுத்தின.

யுத்தம் துவங்கியது; உக்கிரம் அடைந்தது. புதர்களுக்கும் பாறைகளுக்கும் இடையில் மறைந்து மறைந்து ஹம்ஸாவைத் தொடர்ந்து நெருங்கி ஈட்டி குறிபார்த்து வஹ்ஸியால் எறியப்பட்டது. அது நேராக ஹம்ஸா (ரலி) அவர்களின் அடிவயிற்றில் புகுந்து அதன் முறுமுனை இடுப்பிலிருந்து வெளிவந்தது. திகைத்துத் திரும்பிய ஹம்ஸா (ரலி)வஹ்ஷியை நோக்கித் தள்ளாடி கால்களை முன்னெடுத்து வைத்து, அதற்குமேல் முடியாமல் செருகிய ஈட்டியுடன் தடுமாறி வீழ்ந்து மரணமடைந்தார்.

மரணமடைந்த ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலை சின்னாபின்னப் படுத்தி தான் சபதமிட்டது போலவே  ஈரலை அறுத்து எடுத்து அதைக் கடித்து துப்பினாள்.

தமது சிறிய தந்தையின் மரணமும் அவரது உடலுக்கு இழைக்கப்பட்ட கொடூரமும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சொல்லிலடங்கா சோகத்தை அளித்தது.  ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக இருந்தது. மக்கா வெற்றி பெற்ற பிறகு ஹிந்தா மற்றும் வஹ்ஷீ இருவரும் இஸ்லாத்தை ஏற்றனர்.

நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டபோது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலிமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போரிடுவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) வஹ்ஷீ தனக்குள் கூறிக்கொண்டார், ‘நிச்சயம் நான் முஸைலிமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல (வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா(ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம்”

அப்(போரின்)போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்றிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) ஈட்டியை எறிந்தார் வஹ்ஷீ. அது அவனது இரண்டு மார்புக்கு நடுவே பாய்ந்தது. அது அவனுடைய பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தம் வாளால் அவனுடைய உச்சந்தலை மீது ஓங்கி வெட்டிவிட்டார் (அவன்தான் முஸைலிமா) .

(முஸைலிமா கொல்லப்பட்ட போது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்து கொண்டு, ‘அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்துவிட்டான்’ என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.

– முஹம்மது சிராஜுத்தீன்

One thought on “வஹ்ஷீ

  1. அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் மீண்டும் இந்த பக்கத்துக்கு வருகிறேன்.வாழ்த்துக்கள்

Leave a Reply to KSS Jalaluddin Hussaini Cancel reply

Your email address will not be published. Required fields are marked *