உமர் (ரலி)

“முஹம்மதை கொல்லாமல் விடமாட்டேன்” என்று புறப்பட்டார் உமர்.

imL_b2Jfஉமருக்கு அப்போது இருபத்தியாறு வயது. முரடு என்றால் அப்படியொரு முரட்டு சுபாவம் கொண்ட இளைஞர். மிகத் தீவிரமான உருவ வழிபாட்டாளர். ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவரது தோழர்களையும் ஏதாவது செய்து விடமாட்டோமா என்று பலநாட்களாக காத்துக் கிடந்தவர். அபூஜஹல் வாயிலாக அப்படியொரு வாய்ப்பு வந்தபோது, மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஒரு பெரிய வாளை தூக்கிக்கொண்டு உடனே கிளம்பிவிட்டார்.

உமரின் கோபம், உருவமற்ற இறைவனை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னிறுத்தியதனால் மட்டுமல்ல. ஒரே கூட்டுப் பறவைகளாக இருந்த மக்கா நகரின் மக்களிடையே இன்று இரு பிரிவுகள் தோன்றிவிட்டதற்கு அவர்தானே காரணம் என்கிற உணர்ச்சிவயப்பட்ட மனநிலை. அதனால், முஹம்மது நபி (ஸல்) அவர்களை கொன்றுவிட்டால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பினார். தவிரவும் இஸ்லாம் ஒன்றும் மிகத் தீவிரமாகப் பரவி ஏராளமானவர்களை இன்னும் கவர்ந்திருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மதம் மாறிக்கொண்டிருந்தார்கள் ? முஹம்மது நபி (ஸல்) அவர்களை கொன்றுவிட்டால் மதம் மாறுவதும் நின்றுவிடும்; மாறியவர்களையும் மீண்டும் மாற்றிவிடலாம்.இவ்வாறு எண்ணியபடி முஹம்மது நபி (ஸல்) அவர்களை தேடி ஆக்ரோஷத்துடன் புறப்பட்டுப் போனார் உமர்.

போகிற வழியில் உமரைத் தடுத்து நிறுத்தி, “எங்கே இத்தனை ஆக்ரோஷமாகக் கிளம்பிவிட்டீர்கள்?” என்று கேட்டார் அவரது நண்பர் நுஐம் பின் அப்துல்லா. இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை உமர் அறிந்திருக்கவில்லை. “முஹம்மதை கொன்று விட்டு  கபாவில் உள்ள நமது கடவுள்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கப் போகின்றேன்” என்றார் உமர்.

நுஐமுக்குக் கவலை வந்துவிட்டது. என்ன செய்து இந்த முரட்டு உமரைத் தடுத்து நிறுத்துவது ? கையில் கொலை வாளுடன் போய்க்கொண்டிருக்கிறார். முஹம்ம்மது நபி (ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஆயுதம் ஏதும் இருக்காது. தற்காப்புக்காக கூட ஏதும் செய்துகொள்ள முடியாது. இங்கேயே இவரைத் தடுக்காவிட்டால் விபரீதம் நடப்பது உறுதி என்று அஞ்சியவர்,

“முஹம்மதை கொல்வது இருக்கட்டும்; உன் வீட்டிலேயே முஸ்லிம்களை வைத்துக்கொண்டு நீ முஹம்மதை நோக்கிப் போவதைப் பார்த்தால் யாராவது சிரிக்கமாட்டார்களா ?” என்று கேட்டார்.

உமரின் சகோதரியும் அவளது கணவரும் முஸ்லிமாக மாறிவிட்டார்கள் என்கிற உண்மையை (அன்றுவரை உமருக்கு அந்த விஷயம் தெரியாது.) முதல்முதலாக உமரிடம் சொல்லிவிட்டார்.அதனாலென்ன ? முதலில் என் வீட்டுக் களையை  பிடுங்கிவிட்டுப பிறகு முஹம்மதிடம் போகிறேன் என்று சொல்லிவிட்டு உமர் நேரே தன் சகோதரியின் வீட்டுக்கு ஓடத் தொடங்கினார்.

தம் சகோதரி பாத்திமாவின் வீட்டருகே உமர் சென்றபோது உள்ளே யாரோ ஓதிக்கொண்டிருக்கும் குரல் கேட்டது. சந்தேகமே இல்லை. நுஐம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று கோபம் தலைக்கேறி, உருவிய வாளுடன் கதவை உடைத்துத் திறந்து உள்ளே பாய்ந்தார் உமர். உமரைக் கண்டதும் பாத்திமா, தாம் வைத்து ஓதிக்கொண்டிருந்த குர் ஆனின் பிரதியைத் தன் உடைக்குள் மறைக்கப்பார்த்தார். அவளது கணவனோ, தங்களை விட்டுவிடும்படி மன்றாடத் தொடங்கினார். ஆனால் உமர் விடவில்லை. தன் சகோதரியை அடித்து ரத்தக்காயப் படுத்திவிட்டு, மைத்துனரின் மீது பாய்ந்தார். இருவரும் கட்டிப் புரண்டார்கள். அடித்துக் கொண்டு எழப்பார்த்தார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் நாட்டமோ வேறாக இருந்தது.

சகோதரி காயம் பட்டு விழுந்ததும் சிறிதே சலனம் ஏற்பட்டது. சட்டென்று தாக்குதலை நிறுத்திவிட்டு, “நீங்கள் வைத்து ஓதிக்கொண்டிருந்ததைக் கொண்டுவாருங்கள். அப்படி என்னதான் அதில் இருக்கிறது என்று பார்க்கிறேன்.”

தயக்கத்துடன் பாத்திமா எடுத்துவந்து கொடுத்த குர்ஆனின் அந்தச் சில பகுதிகளை வாசித்துப் பார்த்த உமர் தம்மையறியாமல் வாளைக் கீழே போட்டார்.  பிரமிப்பும் அச்சமும் கொண்டு அதுவரை இல்லாத கனிவும் அன்பும் மேலோங்கியவராக கண்கள் கலங்கி நின்றார்.

“இதென்ன! இந்த வசனங்கள் இத்தனை அழகும் சிறப்பும் கொண்டவையாக இருக்கின்றன! நிச்சயம் மனிதர் உருவாக்கியதாக இருக்கமுடியாது. என்றால், இது இறைவனின் வசனங்கள்தாம் என்று தோன்றுகிறது” என்று பேசத் தொடங்கியவர், சில வினாடிகளில் “முஹம்மது ஓர் இறைத்தூதர்தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதோ, இப்போதே போய் அவரைச் சந்தித்து இதனை உரக்கச் சொல்லுகிறேன்” என்று அலறிக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டார். முஹம்மது நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டார்.

காலங்கள் உருண்டோடின மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவையும் வெற்றி கண்டார்கள்.

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை பிரிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது.

உமர் அறிவில் சிறந்தவர் தான். “உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்” என முஹம்மது நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்து சொல்லப்பட்டவர் தான். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட அன்பு அவரை இப்படி சொல்ல வைத்தது.

“முஹம்மது மரணித்துவிட்டார் என சொல்பவர்களை வெட்டுவேன்…”

– முஹம்மது சிராஜுத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *