சூழ்நிலை கைதி

prison-1024x8541தன் இரண்டு குட்டிகளையும் காணாமல் தவித்தது தாய் ஆடு. தினமும் குட்டிகள் விளையாடும் இடத்துக்கு வந்தது. அங்கிருந்த காலடித் தடங்களைப் பார்த்தது. இரண்டு குட்டிகளின் காலடித் தடங்களும் காட்டுப் பக்கமாய் சென்றன. அங்குமிங்கும் தேடித்தேடி பார்த்தது. கடைசியாய் சிங்கத்தின் குகைக்குள் ஆட்டுக்குட்டிகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது. நல்லவேளை, சிங்கம் வேட்டைக்கு போயிருந்தது.

“சிங்கம் வந்தா நாம உயிரோட போக முடியாது. சொன்னாக் கேளுங்க…” என்று தாய் ஆடு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சிங்கம் கர்ஜிக்கும் குரல் கேட்டது.

“அடடா, சிங்கம் வாசலுக்கு வந்துவிட்டதே. இனி, ஓடி தப்பிப்பது கஷ்டம். வேறெதாவது செய்துதான் தப்பிக்க வேண்டும்…” என்று தாய் ஆடு யோசித்த அடுத்த கணமே, பலமாக குரலைச் செருமியது.

தன் குகைக்குள் ஏதோ புதிய குரல் கேட்டதும், சிங்கம் வாசலிலேயே தயங்கி நின்றது.

“ஏ…வீரக்குட்டிகளே. சிங்கக்கறி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இன்னும் சற்று நேரம் பொறுங்கள். எப்படியும் குகைக்கு சிங்கம் வரும். நான் ஒரு போடு போட்டால், சிங்கம் காலி. நீங்கள் ஆளுக்கு பங்கு போட்டு சாப்பிடலாம்…” என்று கட்டையான குரலில் காடே அதிரும்படிச் சொன்னது.

இதைக் கேட்டதும் சிங்கத்திற்கு உடல் வெலவெலத்துப் போனது. “நம் குகைக்கே தைரியமாக வந்து, நம்மை அடித்துத் தின்ன ஏதோ ஒரு புதுவிலங்கு வந்திருக்கிறது போலும்…’ என்றெண்ணி, மெதுவாய் பின்வாங்கி நடந்தது.

நடப்பதையெல்லாம் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த நரியொன்று சிரித்தபடியே சிங்கத்தின் அருகே வந்தது.

“ஏன் பயந்து ஓடுறே… உள்ளே இருப்பது புதுவிலங்கு இல்ல. ஆடுகள்தான். தைரியமாக போ…!” என்றது நரி.

சிங்கம் நம்பவில்லை. உடனே நரி, கயிறொன்றை எடுத்து சிங்கத்தின் வாலில் கட்டியது. மறுமுனையை தன் வாலில் கட்டிக் கொண்டது.

“இப்போதாவது நம்புகிறாயா…? தைரியமாக வா. நானும் உன்னோடு வருகிறேன்…” என்றபடி, சிங்கத்தை குகை நோக்கி அழைத்து வந்தது நரி.

இதைப் பார்த்த தாய் ஆடு சட்டென யோசித்து , இன்னும் குரலை பலமாய் உயர்த்தி, “வீரக்குட்டிகளா…நான் உங்களிடம் அப்பவே சொன்னேனே. நம்ம நரி மாமா எப்படியாவது ஒரு சிங்கத்தை, கயிறைக் கட்டியாவது இழுத்துக் கொண்டு வந்துவிடுவாரென்று. நாம் அடிக்கிற சிங்கத்தில் அவருக்கும் ஒரு பங்கு கொடுக்கணும்…சரியா…?” என்றது.

சிங்கம் நடுநடுங்கிப் போய் விட்டது.

“அடப்பாவி… நயவஞ்சக நரியே. உன்னோட ஒரு பங்குக்காக என்னைப் பலியிடப் பார்த்தாயே…அப்பாடி, நான் பிழைத்தேன்…” என்று தலைதெறிக்க சிங்கம் ஓட்டமெடுத்தது. கூடவே வாலைக் கயிற்றால் கட்டியிருந்த நரியையும் சேர்த்திழுத்துக்கொண்டு ஓடியது. சிங்கத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், நரி தரையில் விழுந்து இழுபட்டு உயிரை விட்டது.

இந்த கதையில் வரும் ஆட்டை போல நாமும் பல நேரங்களில் சூழ்நிலை கைதிகளாய் சிக்கி தவிக்கின்றோம். இது போன்ற ஒரு சிக்கலான ஒரு சூழ்நிலையை முஹம்மது நபி (ஸல்) எப்படி எதிர்கொண்டார்கள் என பார்க்கும்பொழுது ஆச்சரியம் மேலிடுகிறது.


உலகிலேயே மிகப் பெரும் வலிமையான சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ரோமானியர்கள் முஸ்லிம்களைத் தாக்க மூன்று இலட்சம் வீரர்களுடன் மதீனாவை நோக்கி படையெடுத்தார்கள். இதை கேள்வியுற்ற முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூவாயிரம் பேர் கொண்ட ஒரு படையை அனுப்பிவைத்தார்கள்.இதுவரை மதீனாவிலிருந்து புறப்பட்ட படைகளில் மிகப்பெரிய படை இதுதான்.

ரோமானியர்க்கெதிரான இப்படைக்கு ஜைத்(ரலி) அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஜைத்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டால் ஜாஃபர் இப்னு அபூதாலிப்(ரலி) அவர்கள் தலைமை ஏற்க வேண்டும். அவர்களும் வீரமரணமடைந்துவிட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் தலைமை தாங்க வேண்டும். அவர்களும் வீரமரணம் எய்தினால் இராணுவம் புதிய தளபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு இந்தப் படையை அனுப்பினார்கள்.

முஅத்தா என்னுமிடத்தில் போர் மூண்டது. இந்தப் போர் கி.பி. 629ம் ஆண்டில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிகழ்ந்தது. ஏழு நாட்கள் நீடித்த இந்த போரில் மூவாயிரம் பேர் கொண்ட முஸ்லிம்களின் சிறுபடை கிழக்கு ரோமானியப் பேரரசின் மாபெரும் இம்பீரியல் இராணுவத்தைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்துவிட்டது. நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகளும் வீரமரணம் அடைந்து விட்டார்கள். எனவே அவர்களுக்குப்பின் தேர்ந்தெடுக்கப் பட்ட தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் தலைமையில் படை மதீனாவுக்குத் திரும்பியது.

ரோமானிய சாம்ராஜ்யத்தின் இராணுவத்தை எதிர்கொள்ளும் தைரியத்தை இழந்து நேரடி மோதலைத் தவிர்க்க முஹம்மது நபி (ஸல்) விரும்பியிருந்தால் அவர்கள் மதீனாவை, எதிரியால் சூழப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருப்பார்கள். ரோமானிய இராணுவத்தை எதிர்கொள்ள கட்டளை பிறப்பித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இம்முடிவு அவர்களை ஒட்டுமொத்த அழிவிலிருந்து காப்பாற்றியது.

மேலே குறிப்பிட்டது போல நாம் அனைவரும் சூழ்நிலை கைதிகளே. சூழ்நிலை கண்டு அஞ்சி வாழ்பவன் தோல்வியையே தழுவுவான். எத்தகைய மோசமான சூழ்நிலை ஆயினும் அதனை சிறப்பாகக் கையாளத் தெரிந்தவன் அந்த மோசமான சூழ்நிலையை தனக்கு மிகச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி அடைவான்.

நம் அனைவரையும் வல்ல இறைவன் வெற்றியாளர்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக… ஆமீன்

– முஹம்மது சிராஜுத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *