பொறுமை

twnyi_277345“மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.”

-அல்குர்ஆன்  (2:45)

இந்த மனித சமுதாயத்தையே தன்னை மட்டும் வணங்குவதற்காகவே படைத்தேன் என்று சொல்லக்கூடிய இறைவனை தொழுது அவனிடம் உதவி கேளுங்கள் என்று சொல்வதில் எந்த ஆசசரியமும் இல்லை ஆனால் பொறுமையுடன் கேளுங்கள் என ஏன் இறைவன் சொல்கிறான்.

பெரும்பாலும் மனிதர்களாகிய நாம் அவசரக்காரர்களாகவே இருக்கின்றோம். நமது பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கிவிட்டால் நாம் பொறாமை படுகின்றோம், இன்னும் ஒருபடிமேலே சென்று இறைவனையே நிந்திக்கின்றோம். ஆனால் நம் மனம் அந்த கார் வாங்குவதற்காக அவன் பட்ட சிரமங்கள் என்ன? அவன் செய்த உழைப்பு என்ன? அவன் பொறுத்திருந்த காலம் என்ன எதையுமே சிந்திக்க மறந்து விடுகின்றது.

ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனி தருகிறது ! இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது.

ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீன மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை. ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி ? சட சடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப்பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா ? 80 அடிகள்.

நான்கு ஆண்டுகாலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது ? ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதை புரிந்து கொள்ளலாம். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும். அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை !

© 2010 CBS Interactiveகொரில்லா கிளாஸ் – ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அனைவருக்கும் இந்த பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். கொரில்லா கிளாஸ் என்ற ஒரு ஸ்கிரீன் வகையை கார்னிங் (Corning) நிறுவனம் வடிவமைத்துத் தருகிறது. இரசாயனக் கலவை மூலம் கிளாஸ் உறுதிப்படுத்தப்பட்டு, மெலிதாகவும், தடிமன் குறைவானதாகவும், பழுது அடையாத வகையிலும் உருவாக்கப்படுகிறது. இதனுடைய முக்கிய அம்சமே உறுதியாகவும், அதே சமயத்தில் தடிமன் குறைவாகவும் இருப்பதுதான்.

கொரில்லா கிளாஸ் கார்னிங் நிறுவனத்தால் 1960களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரிதாக எந்த தேவையும் அதற்கு அப்போது இருந்திருக்கவில்லை. ஆனாலும் கார்னிங் நிறுவனம் சோர்ந்துவிடவில்லை. அந்த தொழில்நுட்பத்தை மேலும் மெருகேற்றி சரியான நேரத்திற்காக காத்திருந்தார்கள். 2006ல் அவர்களுக்கு Apple i-Phone நிறுவனத்திடமிருந்து ஆர்டர் வந்தது.

சரியாக 2007 ஜனவரியில் i-Phone கொரில்லா கிளாசுடன் வெளியானது. அவ்வளவுதான் அவர்களுக்கு நிற்ககூட நேரமில்லை. ஆர்டர்கள் குவியத் தொடங்கின. கடந்த 2013ம் ஆண்டு அந்நிறுவனம் ஈட்டிய இலாபம் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நாற்பது வருட உழைப்புடன் இணைந்த பொறுமை கார்னிங் நிறுவனத்தை வெற்றிகரமானதாக மாற்றியது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை புரட்டிப்பாருங்கள; நாற்பது வயதில் தான் நபி என்று தெரிந்து கொண்டவர்களுக்கு வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. 20 வருடங்களுக்கு மேலான போராட்டம் மற்றும் தியாகமே அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. ஆனால் அந்த இருபது வருட போராட்டம எப்பேற்பட்ட பணிவை பக்குவத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அவரை பின்பற்றிய ஸஹாபக்களுக்கும் பெற்றுத்தந்தது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

போரிட அச்சம் கொண்ட குறைஷியரும் அவர்களது அணியிலிருந்த பிற இனக்குழு படையினரும் தமது ஆயுதங்களை வீசிவிட்டு கஃபாவுக்குள்ளே இருந்த ஏராளமான தெய்வச் சிலைகளின் பின்னால் உயிருக்குப் பயந்து பதுங்கிக்கொண்டிருந்தார்கள். இந்த யுத்தம் மட்டும் நடக்குமானால் மக்காவில் ஒரு குறைஷியும் உயிருடன் இருக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. காரணம், அணிவகுத்து வந்திருந்த முஸ்லிம்களின் படைபலம் ஒருபுறம் என்றால், மக்காவிலேயே பொதுமக்களிடையே பரவியிருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழ் இன்னொருபுறம். உள்ளூர் மக்களின் செல்வாக்கை இழந்திருந்த குறைஷி ராணுவத்தினர் எப்படியும் தம் மக்களே முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆகவே,ஏதாவது செய்து உயிர் பிழைத்தால் போதும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது!

வெற்றிக்களிப்புடன் கஃபாவுக்குள் நுழைந்த முஸ்லிம் இராணுவ வீரர்களுக்கு முஹம்மது நபி (ஸல்) ஓர் உத்தரவை இட்டிருந்தார்கள். யாரையும் கொல்லாதீர்கள். யாரையும் எதிரி என்று எண்ணாதீர்கள். யாரையும் கைது செய்யவும் வேண்டாம். உலக சரித்திரத்தில் இன்றுவரை இதற்கு நிகரானதொரு சம்பவம்; எந்த தேசத்திலும், எந்தப் போர்க்களத்திலும் நடந்ததில்லை. தோல்வியுற்ற மக்கா இராணுவத்தினர் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. கொல்லப்படவில்லை.

மாறாக,

‘உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் விடுதலை பெற்றீர்கள். மனிதர்களுக்கு இடையில் இதுகாறும் இருந்துவந்த அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் வெறுப்பையும் காலடியில் இட்டு நசுக்கிவிடுவோம்’ என்று முஹம்மது நபி (ஸல்) சொன்னார்கள்.

இருபது வருடத்திற்கும் மேலான போராட்டம் அவர்களுக்கு பணிவையும் பக்குவத்தையும் கொடுத்திருந்தது. அந்தக் பணிவும் பக்குவமும்தான் இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம். அன்றைய தினம் தொடங்கி இஸ்லாம் ‘பரப்பப்படவேண்டிய’ அவசியமே இன்றித் தானாகப் பரவத் தொடங்கியது.

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப்பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக்கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது. தண்ணீரின் ஆழம் தெரியாமல் குதிப்பதோ, மலையின் ஆழம் தெரியாமல் ஏறச் செல்வதோ ஆபத்தில் முடியும்! பாதியிலேயே பொறுமையைக் கழற்றி விட்டுவிடுபவர்கள் வெற்றியின் பதக்கங்களை அணிந்து கொள்வதில்லை. அவசரம் நமக்கு சிப்பிகளைத் தரலாம், ஆனால் பொறுமையே முத்துக்களைத் தரமுடியும்.

ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது பொறுமையே ! பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு ! அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன்தரும்.

யாருக்கும் வெற்றி என்பது கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசுப் பொருள் போல வந்து சேர்வதில்லை. வெற்றிக்கு 99 சதவீதம் பொறுமையான உழைப்பும், ஒரு சதவீதம் உந்துதலும் இருக்க வேண்டும் என்கிறார் ஐன்ஸ்டீன் ! வெற்றியையும், வெற்றியைக்கொண்டாடும் மனநிலையையும், ஆழமான குடும்ப உறவையும் தருகின்ற பொறுமை கடலினும்பெரிது.

இறைவன் நம்மை அவனிடத்தில் தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உதவி கேட்பவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக. ஆமீன்.

 – முஹம்மது சிராஜுத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *