உலகின் தலைசிறந்த சொல் செயல்

செயல்படுத்தப்படாத எந்த ஒரு சொல்லுக்கும் இவ்வுலகில் மதிப்பில்லை. தான் செயல்படுத்தாத எந்த ஒரு செயலை சொல்லும் மனிதனுக்கும் இங்கே மதிப்பில்லை.

ஆனால் பின்பற்றப் படாத வார்த்தைகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது நமது வாழ்க்கை. செயலில் இல்லாத சொற்களை எளிதில் உபதேசித்து விடுகிறோம். சொல்வதற்கு வார்த்தைகள் ஏராளம் உள்ளன. செய்வதற்கு நாம் இயலாதவர்களாக ஆகி விடுகிறோம்.

இதை திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

(குறள் எண்:664)

ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளியவாம்; சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் கடினம் ஆகும் என்பது இதன் பொருள்.

மதுவின் தீங்கு குறித்து பகலெல்லாம் உரையாற்றி விட்டு இரவில் மது அருந்துபவரின் மதிப்பு என்னவாக இருக்க முடியும்? பெண்ணுரிமை குறித்து முழங்கி விட்டு தனது மனைவியை அடிப்பவரின் மதிப்பு என்னவாக இருக்க முடியும்?

நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கின்றீர்கள், நேசிப்பதாய் அவளிடம் சொல்கின்றீர்கள் ஆனால் அவளது தேவையை பூர்த்தி செய்ய தவறும்போது மனைவியிடமிருந்து அன்பை எதிர்பார்க்க முடியுமா?

உங்கள் பிள்ளைகளின் மீது அதீத அன்பு செலுத்துகின்றீர்கள் ஆனால் ஒரு தந்தையாக உங்கள் கடமையை செய்ய மறுக்கும் உங்களை உங்கள் பிள்ளைகள் மதிப்பார்களா?

உங்கள் மனைவியை நீங்கள் எவ்வளவு நேசித்தாலும், உங்கள் பிள்ளைகளின் மீது எவ்வளவு அன்பு செலுத்தினாலும் அவர்கள் மீதான உங்கள் கடமையை நீங்கள் செயல்படுத்தும்போது மட்டுமே உங்களின் நேசம் உங்களின் அன்பு புரிந்து கொள்ளப்படுகிறது. இல்லையேல் கைசேதமே…

இது போலவே ஒரு முஸ்லிம் என்பவன்

“லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹுவின் திருத்தூதர் ஆவார்கள்.

என சொல்லி அதை முழு மனதாக ஏற்க வேண்டும்.

மேலும் தான் சொன்ன கலிமாவை உண்மைபடுத்தும் விதமாக ஒவ்வொரு முஸ்லிமும்

1) அல்லாஹ்வை வணங்கவும், அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருக்கவும் வேண்டும்.

2) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும்.

3) கடமையான ‘ஸக்காத்’ (ஏழை வரி) வழங்க வேண்டும்.

4) ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்.

5) வசதி படைத்தோர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன செயல்களே நாளை மறுமையில் இறைவனிடத்திலே நீங்கள் முஸ்லிம் என்பதாக சாட்சி பகரும். மாறாக செயல்படுத்த தவறிய நீங்கள் ஒரு முஸ்லிம் என சொன்னாலும் அதற்கு உரித்தான எந்த செயலும் இல்லாதபோது இறைவன் முன் கைசேதமே.

வல்ல இறைவன் நம் அனைவருக்கும் கலிமாவை மொழிந்து அதன்படி நடக்கக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக…..

– முஹம்மது சிராஜுத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *