பொறுமை

twnyi_277345“மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.”

-அல்குர்ஆன்  (2:45)

இந்த மனித சமுதாயத்தையே தன்னை மட்டும் வணங்குவதற்காகவே படைத்தேன் என்று சொல்லக்கூடிய இறைவனை தொழுது அவனிடம் உதவி கேளுங்கள் என்று சொல்வதில் எந்த ஆசசரியமும் இல்லை ஆனால் பொறுமையுடன் கேளுங்கள் என ஏன் இறைவன் சொல்கிறான்.

பெரும்பாலும் மனிதர்களாகிய நாம் அவசரக்காரர்களாகவே இருக்கின்றோம். நமது பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கிவிட்டால் நாம் பொறாமை படுகின்றோம், இன்னும் ஒருபடிமேலே சென்று இறைவனையே நிந்திக்கின்றோம். ஆனால் நம் மனம் அந்த கார் வாங்குவதற்காக அவன் பட்ட சிரமங்கள் என்ன? அவன் செய்த உழைப்பு என்ன? அவன் பொறுத்திருந்த காலம் என்ன எதையுமே சிந்திக்க மறந்து விடுகின்றது.

ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனி தருகிறது ! இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது.

ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீன மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை. ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி ? சட சடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப்பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா ? 80 அடிகள்.

நான்கு ஆண்டுகாலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது ? ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதை புரிந்து கொள்ளலாம். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும். அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை !

© 2010 CBS Interactiveகொரில்லா கிளாஸ் – ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அனைவருக்கும் இந்த பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். கொரில்லா கிளாஸ் என்ற ஒரு ஸ்கிரீன் வகையை கார்னிங் (Corning) நிறுவனம் வடிவமைத்துத் தருகிறது. இரசாயனக் கலவை மூலம் கிளாஸ் உறுதிப்படுத்தப்பட்டு, மெலிதாகவும், தடிமன் குறைவானதாகவும், பழுது அடையாத வகையிலும் உருவாக்கப்படுகிறது. இதனுடைய முக்கிய அம்சமே உறுதியாகவும், அதே சமயத்தில் தடிமன் குறைவாகவும் இருப்பதுதான்.

கொரில்லா கிளாஸ் கார்னிங் நிறுவனத்தால் 1960களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரிதாக எந்த தேவையும் அதற்கு அப்போது இருந்திருக்கவில்லை. ஆனாலும் கார்னிங் நிறுவனம் சோர்ந்துவிடவில்லை. அந்த தொழில்நுட்பத்தை மேலும் மெருகேற்றி சரியான நேரத்திற்காக காத்திருந்தார்கள். 2006ல் அவர்களுக்கு Apple i-Phone நிறுவனத்திடமிருந்து ஆர்டர் வந்தது.

சரியாக 2007 ஜனவரியில் i-Phone கொரில்லா கிளாசுடன் வெளியானது. அவ்வளவுதான் அவர்களுக்கு நிற்ககூட நேரமில்லை. ஆர்டர்கள் குவியத் தொடங்கின. கடந்த 2013ம் ஆண்டு அந்நிறுவனம் ஈட்டிய இலாபம் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நாற்பது வருட உழைப்புடன் இணைந்த பொறுமை கார்னிங் நிறுவனத்தை வெற்றிகரமானதாக மாற்றியது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை புரட்டிப்பாருங்கள; நாற்பது வயதில் தான் நபி என்று தெரிந்து கொண்டவர்களுக்கு வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. 20 வருடங்களுக்கு மேலான போராட்டம் மற்றும் தியாகமே அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. ஆனால் அந்த இருபது வருட போராட்டம எப்பேற்பட்ட பணிவை பக்குவத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அவரை பின்பற்றிய ஸஹாபக்களுக்கும் பெற்றுத்தந்தது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

போரிட அச்சம் கொண்ட குறைஷியரும் அவர்களது அணியிலிருந்த பிற இனக்குழு படையினரும் தமது ஆயுதங்களை வீசிவிட்டு கஃபாவுக்குள்ளே இருந்த ஏராளமான தெய்வச் சிலைகளின் பின்னால் உயிருக்குப் பயந்து பதுங்கிக்கொண்டிருந்தார்கள். இந்த யுத்தம் மட்டும் நடக்குமானால் மக்காவில் ஒரு குறைஷியும் உயிருடன் இருக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. காரணம், அணிவகுத்து வந்திருந்த முஸ்லிம்களின் படைபலம் ஒருபுறம் என்றால், மக்காவிலேயே பொதுமக்களிடையே பரவியிருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழ் இன்னொருபுறம். உள்ளூர் மக்களின் செல்வாக்கை இழந்திருந்த குறைஷி ராணுவத்தினர் எப்படியும் தம் மக்களே முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆகவே,ஏதாவது செய்து உயிர் பிழைத்தால் போதும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது!

வெற்றிக்களிப்புடன் கஃபாவுக்குள் நுழைந்த முஸ்லிம் இராணுவ வீரர்களுக்கு முஹம்மது நபி (ஸல்) ஓர் உத்தரவை இட்டிருந்தார்கள். யாரையும் கொல்லாதீர்கள். யாரையும் எதிரி என்று எண்ணாதீர்கள். யாரையும் கைது செய்யவும் வேண்டாம். உலக சரித்திரத்தில் இன்றுவரை இதற்கு நிகரானதொரு சம்பவம்; எந்த தேசத்திலும், எந்தப் போர்க்களத்திலும் நடந்ததில்லை. தோல்வியுற்ற மக்கா இராணுவத்தினர் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. கொல்லப்படவில்லை.

மாறாக,

‘உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் விடுதலை பெற்றீர்கள். மனிதர்களுக்கு இடையில் இதுகாறும் இருந்துவந்த அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் வெறுப்பையும் காலடியில் இட்டு நசுக்கிவிடுவோம்’ என்று முஹம்மது நபி (ஸல்) சொன்னார்கள்.

இருபது வருடத்திற்கும் மேலான போராட்டம் அவர்களுக்கு பணிவையும் பக்குவத்தையும் கொடுத்திருந்தது. அந்தக் பணிவும் பக்குவமும்தான் இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம். அன்றைய தினம் தொடங்கி இஸ்லாம் ‘பரப்பப்படவேண்டிய’ அவசியமே இன்றித் தானாகப் பரவத் தொடங்கியது.

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப்பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக்கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது. தண்ணீரின் ஆழம் தெரியாமல் குதிப்பதோ, மலையின் ஆழம் தெரியாமல் ஏறச் செல்வதோ ஆபத்தில் முடியும்! பாதியிலேயே பொறுமையைக் கழற்றி விட்டுவிடுபவர்கள் வெற்றியின் பதக்கங்களை அணிந்து கொள்வதில்லை. அவசரம் நமக்கு சிப்பிகளைத் தரலாம், ஆனால் பொறுமையே முத்துக்களைத் தரமுடியும்.

ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது பொறுமையே ! பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு ! அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன்தரும்.

யாருக்கும் வெற்றி என்பது கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசுப் பொருள் போல வந்து சேர்வதில்லை. வெற்றிக்கு 99 சதவீதம் பொறுமையான உழைப்பும், ஒரு சதவீதம் உந்துதலும் இருக்க வேண்டும் என்கிறார் ஐன்ஸ்டீன் ! வெற்றியையும், வெற்றியைக்கொண்டாடும் மனநிலையையும், ஆழமான குடும்ப உறவையும் தருகின்ற பொறுமை கடலினும்பெரிது.

இறைவன் நம்மை அவனிடத்தில் தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உதவி கேட்பவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக. ஆமீன்.

 – முஹம்மது சிராஜுத்தீன்

வாழ்க்கை வாழ்வதற்கே

suicide-2

வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சனை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சனையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.

பல இலட்ச மனித உயிர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட இறுதியில் தோல்வியை தாங்கமுடியாமல் மனம் உடைந்து உணவுக் கிடங்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது. அன்றாடம் பத்திரிக்கைகளை புரட்டினால் இளம்பெண் தற்கொலை, காதல் ஜோடிகள் தற்கொலை, கள்ளக் காதலினால் தற்கொலை, கடன் தொல்லை தாங்க முடியாமல் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை, பரீட்சையில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவ-மாணவி தற்கொலை… என்று வகைவகையான தற்கொலை செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி நடந்தேறுவதை காண முடிகிறது.

பிரச்சனைக்கு தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டுதான் இருக்கின்றது, இருக்கும். ஏழைக்கு பணப்பிரச்சனை என்றால் பணக்காரனுக்கு உடல் பிரச்சனை. சிலருக்கு பெற்ற மக்களால் பிரச்சனை என்றால் சிலருக்கு மக்களை பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள், இவ்வாறாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உட்பட்டவனாகவே வாழ்கின்றான். இன்னும் சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செயகின்றார்கள். ஆக,பிரச்சனை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல, ஊர் முழவதும், நாடு முழவதும் ஏன்! உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

மனிதன் என்று பிறந்துவிட்டால் அவனது வாழ்வில் பலவேறு வழிகளில் இறைவன் சோதனை செய்வான் என்பதை இஸ்லாம் உணர்த்துகின்றது. இம்மையின் சொற்ப கஷ்டங்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மறுமையில் நிரந்தரமாய் சுவர்க்கத்தை இழக்க வேண்டுமா? சொல்லுங்கள் என் அன்பு சகோதர சகோதரிகளே!

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

-அல் குர் ஆன் (2:214).

இவ்வுலக பிரச்சனைகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டால் நமக்கு நிச்சயம் நரகம்தான் என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போது தம்முடன் இருந்தவர்களில், தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைப் பார்த்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது, அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அவருக்கு நிறையக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. மக்களில் சிலர், (நபி – ஸல் – அவர்களின் அச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அப்போது அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணர்ந்தார். எனவே, தம் அம்புக்கூட்டுக்குள் கையை நுழைத்து, அதிலிருந்து அம்புகளை எடுத்து, அவற்றால் தம்மை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார். (அதைக் கண்ட) முஸ்லிம்களில் சிலர் விரைந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் சொன்னது உண்மை தான் என அல்லாஹ் உறுதிப்படுத்திவிட்டான். இன்ன மனிதர் தன்னை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்” என்று கூறினர். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இன்னாரே! நீங்கள் எழுந்து சென்று (மக்களிடையே), ‘இறைநம்பிக்கையாளரைத் தவிர (வேறெவரும்) சொர்க்கத்தில் நுழைய முடியாது, அல்லாஹ், இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்” என்று பொது அறிவிப்புச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

புகாரி – 4204

சற்று சிந்தித்துப் பாருங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் கண்டு கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அல்லாஹ்வுக்காக போர் செய்த ஒருவர் தற்கொலை செய்ததினால் நரகவாதி என்றால் நாம் தற்கொலை செய்வோமேயானால் நம்முடைய நிலைமையென்ன?

அதுமட்டுமின்றி அல்லாஹ் யாரையும் அவனது தகுதியை மீறி சோதனை செய்வதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

-அல் குர் ஆன்(2:286).

அதே சமயம் நீங்கள் உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளும் தீங்கினுடைய சிரமமோ மிக கொடியதாக இருக்குமென்பதையும் மறந்துவிட வேண்டாம்.

‘எவர் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரோ அவர் நரகத்தில் எப்பொழுதும் உயரமான இடத்திலிருந்து விழுந்து கொண்டே இருப்பார், எவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரோ அவரது கையில் விஷம் இருக்கும் அதை நரகத்தில் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பார், எவர் இரும்பு ஆயுதத்தை கொண்டு தற்கொலை செய்து கொண்டாரோ அவர் கையில் அந்த இரும்பு ஆயுதம் இருக்கும் அதைக் கொண்டு எப்போதும் நரகில் தன் வயிற்றை கிழித்துக் கொண்டே இருப்பார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ{ஹரைரா(ரலி), நூல்கள்: அஹமது, அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.

நபிமார்களின் வரலாற்றை சற்று புரட்டிப்பாருங்கள் அவர்கள் பட்ட சிரமங்களை சிந்தித்துப்பாருங்கள்.

சுவர்க்கத்தில் தனது துணைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த ஆதம் (அலை) அவர்கள் சுவர்க்கத்தை விட்டு துரத்தப்பட்டார்களே. அத்தனை இன்பமும் ஒருங்கே கிடைக்கக்கூடிய சுவர்க்கத்தைவிட்டு ஒருவர் துரத்தப்பட்டு ஒரு வேலை உணவிற்கும் நீ சிரமப்பட்டே தீர வேண்டுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டார்களே.

கப்பலிலே பிரயாணம் சென்றுகொண்டிருந்தபோது யூனுஸ் (அலை) அவர்கள் பாவம் செய்தவர்களென்று சொல்லி கடலிலே தள்ளப்பட்டு மீன் வயிறறுக்குள் சென்றார்களே.

அல்லாஹ்வால் ஹபீப் என்று அழைக்கப்பட்ட பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பார்க்காத சோதனைகளா? தாயிப் நகர மக்களால் கல்லால் அடித்து விரட்டப்பட்டார்கள் என்பதை நாம் மறக்க முடியுமா? அல்லது பெற்ற கடனை திருப்பி செலுத்தமுடியாமல் யூதனால் கழுத்து நெறிக்கப்பட்டார்களே! அதை மறுக்க முடியுமா?

இவர்கள் அனைவரும் நமக்காக இத்தனை சோதனைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் சோதனைககு பயந்து தவறான முடிவெடுத்திருப்பார்களேயானால் இன்று நாமெல்லாம் ராமசாமியாகவோ முன்னுசாமியாகவோ சிலைகளை வணங்கியிருப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாமென்ன இவர்களைப்போல் மற்றவர்களுக்காக பிரச்சனைகளை சந்திக்கின்றோமா. நாம் நலமாக வாழ, நமது பிள்ளைகள் நலமாக வாழ, நமது குடும்பம் நலமாக வாழவே சிரமப்படுகின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த 21ம் நூற்றான்றில் நபிமார்களின் வரலாற்றுடன் நம்முடைய  வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க முடியாது என்று எண்ணுகின்றீர்களா? இதே நூற்றாண்டில் வாழக்கூடிய உங்கள் சோமாலிய சகோதரிகளை சற்று கவனியுங்கள. பெற்ற மகனுக்கு கொடுக்க உணவின்றி தனது கண்முன்னே மகனை தினம் தினம் பறிகொடுத்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தாய்மார்களை பாருங்கள்.

இஸ்ரேல் இராணுவத்தால் அழைத்து செல்லப்பட்ட மகன் உயிருடன் இருக்கின்றானா இல்லை இறந்துவிட்டானா என்பது கூட தெரியாமல் தினம் தினம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் உங்கள் பாலஸ்தீன சொந்தங்களை பாருங்கள். இவர்களை விட அதிகமாகவா நீங்கள் பிரச்சனைகளை சந்தித்துவிட்டீர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு.

சரி நீங்கள் நினைப்பது போல பிரச்சனைகளே இல்லாத ஒரு வாழ்க்கை எப்படி இருக்குமென்று என்றாவது சிந்தித்துப்பார்த்ததுன்டா? சந்தோஷம் மட்டுமே நமது வாழ்க்கையாக இருக்குமென்றால் நிச்சயமாக நாம் அனைவரும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்பது உங்களுக்கு தெரியுமா ?

மூஸா (அலை) அவர்களின் வரலாற்றை சற்று புரட்டிப்பாருங்கள். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து மக்களை காப்பாற்றிய் அல்லாஹ் ‘மன்னு, ஸல்வா’ எனக்கூடிய மேன்மையான உணவை அவர்களுக்கு மேலிருந்து இறக்கிவைத்தான். ஆனால் அவர்களோ தலைசிறந்த அந்த உணவை, அல்லாஹ்வால் நேரடியாக அனுப்பிவைக்கப்பட்ட அந்த உணவை விடுத்து கீரையையும், வெள்ளரிக்காயையும், கோதுமையையும், பருப்பையும், வெங்காயத்தையும் இறைவனிடத்திலே கேட்டு அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள் என்பதை பின்வரும் இறைவசனம் நமக்கு மேற்கோள் காட்டுகின்றது.

இன்னும், “மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்” என்று நீங்கள் கூற, “நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது. 

-அல் குர் ஆன்(2:61)

ஆக உங்களது வாழ்வில் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் இன்பம் மட்டுமே இருக்குமெனில் மூஸா (அலை) அவர்களுடைய மக்களுக்கு ஏற்பட்டது போல மிகப்பெரிய இன்பம் சந்தோஷம் கூட மிக சாதரணமான விஷயமாகவே தோன்றும் என்பதை நியாபகத்தில் கொள்ளுங்கள்.

எப்படி பசித்திருப்பவனுக்கே உணவினுடைய அருமை தெரியுமோ அதுபோல துன்பத்தை அனுபவிப்பவனுக்கே உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியும். அதனால்தான் 30 நாட்கள் நோன்பிருந்து அல்லாஹ்விற்காக பசித்திருந்த பிறகேநாம் பெருநாள் கொண்டாடுகின்றோம். நாளை மறுமை நாளிலே நரகத்தின் மேலே போடப்பட்டிருக்கும் பாலத்தை கடந்தே நீங்கள் சுவர்க்கத்திற்குள் நுழைய முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நரக நெருப்பின் வேதனை உங்களுக்கு சுவர்க்கத்தின் இன்பத்தை பலமடங்கு அதிகப்படுத்தும். ஒருவேலை நீங்கள் நரகத்தை பார்க்காமலேயே சுவர்க்கத்திற்கு செல்வீர்களாயின் உங்களுக்கு சுவர்க்கம் கூட அற்பமாகத்தான் தெரியும் என்பதே உண்மை.

வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்து இறைவனின் மிகப்பெரிய அன்பை பெற்று இவ்வுலகிலும் செல்வாக்கை பெற்ற மனிதர்களை சற்று சிந்தித்துப்பாருங்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வினால் பல சோதனைக்குள்ளாகி நம்ரூத் என்னும் கொடியவனால் நெருப்பிலே தூக்கி வீசப்பட்டார்கள், தனது மனைவி ஹாஜிரா (அலை) அவர்களையும் பால்குடி மறவா இஸ்மாயில் (அலை) அவர்களையும் யாருமில்லா பாலைவனத்திலே அல்லாஹ்விற்காக விட்டுவிட்டு வந்தார்கள், மேலும் வேறொரு சமயம் தனது மகனை அல்லாஹ்விற்காக பலிகொடுக்க முயன்றார்கள்.அவர்கள் அன்று அனுபவித்த துன்பத்தை சிறப்பிக்கும் விதமாக அல்லாஹ் இப்ராஹீம் (அலை) நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக்கி அவர்களை சிறப்பித்தான் என்பதை பின்வரும் இறைவசனம் நமக்கு தெரிவிக்கின்றது.

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.

– அல் குர் ஆன்(2:124)

(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். 

– அல் குர் ஆன்(2:125)

ஹாஜிரா (அலை) இஸ்மாயீல் (அலை)அவர்களுடன் தன்னந்தனியாக அரபு பாலைவனத்திலே அல்லாஹ்வின் அறிவிப்பின்படி இப்ராஹீம் (அலை)  அவர்களால் விடப்படுகிறார்கள். ஹாஜிரா (அலை) அவர்களிடமிருந்த தண்ணீரோ தீர்ந்துவிட்டது. சிறு குழந்தையான இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வழியில்லை. இருப்பதோ பாலைவனம். தண்ணீருக்காக ஸஃபா என்னும் குன்றிலுருந்து மர்வா என்னும் இன்னொரு குன்றிற்கு தண்ணீர் தேடி ஓடுகிறார்கள். ஒரு முறையல்ல இரண்டு முறையல்ல ஏழு முறை ஓடுகிறார்கள். அதன் பிறகே அல்லாஹ் அவர்களுக்கு தண்ணீரை வழங்குகின்றான்.

இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற சஃயு (தொங்கோட்டம்) ஆகும். சற்று சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே! அன்று அல்லாஹ்வுக்காக சிரமப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ்வோ உலக முடிவு நாள்வரை அவர்களைப் போல நம்மை ஓடவைத்து அவர்களுக்கு மிகப்பெரிய சிறப்பைக் கொடுத்துவிட்டான். நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி இல்லை யாராகஇருந்தாலும் சரி ஹாஜிரா (அலை) என்னும் பெண்ணைப்போல ஓடினால் தான் உங்களுடைய வழிபாடு அங்கே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்படிப்பட்ட மக்களுக்கு மத்தியில் இறை தூதுவராக வந்தார்கள் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். ஒன்றல்ல் இரண்டல்la முந்நூற்று அறுபது கடவுள்களை சிலைகளாகச் செய்துவைத்து வணங்கும்  இனம். உழைத்துச் சாப்பிட்டு, சந்ததி பெருக்கி, மாண்டு போய்க்கொண்டிருந்த இனம்.பெண்கள் படைக்கப்பட்டதே, சந்ததி பெருக்குவதற்குத்தான் என்று உறுதிபட நம்பியதோர் இனம். ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் முட்டிமோதிக்கொண்டிருந்த இனம். படிப்பறிவில்லாத இனம். முரட்டு இனம். யுத்தவெறி பிடித்த இனம். தமது பெருமை என்னவென்றே உணராமல் காலம் காலமாக வீணடித்துவிட்ட இனம். இதனாலேயேதான் “காட்டரபிகள்” என்றும் அவர்கள் அன்று வருணிக்கப்பட்டார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை சொல்லால் அடித்தார்கள், கல்லால் அடித்தார்கள், இன்னும் மக்கா நகரைவிட்டே துரத்தினார்கள்.ஆனால் அவர்களின் துன்பம் எவ்வளவு பெரியதொரு மாற்றத்தை அரேபிய மக்களிடையே கொண்டுவந்தது என்பதை என்றாவது சிந்தித்து பார்த்திருக்கின்றோமா?

அதுநாள் வரை “நீங்கள் யார்?” என்று கேட்டால் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், எந்த கோத்திரத்தினர்கள் என்றெல்லாம் பட்டியலிட்டுக்கொண்டிருந்தவர்கள், அதன்பின் “நாங்கள் முஸ்லிம்கள்” என்கிற ஒரு சொல்லில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார்கள். குர்ஆனை ஓதவேண்டும் என்கிற விருப்பம் காரணமாகவே அரபியில் எழுதப்படிக்கக் கற்கத் தொடங்கினார்கள். கல்வி பயிலத் தொடங்கியதனாலேயே தமது கலாசாரச் செழுமை புரிந்தவர்களானார்கள். கலாசார பலம் உணர்ந்ததனாலேயே அதனைக் கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டார்கள்.

காட்டரபிகள்!

இனி யார் அப்படிச் சொல்லிவிடமுடியும்?

இன்று முஸ்லிம் அல்லாத யூத கிருத்துவ வரலாற்று ஆசிரியர்கள்  கூட முஹம்மது நபி (ஸல்) அவர்களை அனைத்து உலக தலைவர்களுக்கும் மேலானவராக குறிப்பிடுகின்றார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க முடியாமல் நிகழக்கூடியவையே. அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே. உதாரணமாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள்  விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். காந்தி இல்லாவிடினும் பிரிட்டனிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றுத்தானிருக்கும்.

ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று ஒருவர்  வரவில்லையெனில் இன்னும் அவர்கள் காட்டரபிகளாகவே தான் வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பதை அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள்.

மேலும் படைக்கப்பட்ட சமுதாயங்களிலேயே மிகவும் சிறந்த சமுதாயமாக நாம் இருக்கின்றோம் என்பதை இறைவன் திருமறையிலே பின்வரும் வசனத்தில் அறிவிக்கின்றான்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.

– அல் குர் ஆன்(2:125)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நம்மை ஏன் வல்ல இறைவன் சிறந்த சமுதாயமாக அறிவித்தான் என்பதை சிந்தித்ததுண்டா? இப்ராஹீம் (அலை) அவர்களின் மக்கள் சிலை வணங்குபவர்களாக இருந்தார்கள். லூத் (அலை) அவர்களின் மக்கள் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தார்கள். மூஸா (அலை) அவர்களின் காலத்திலிருந்த ஃபிர்அவ்ன் தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொண்டான்.

ஆனால் நம்முடைய சமுதாயம் எப்படிப்பட்டது என்பதை சிந்தித்துப்பாருக்கள். சிலை வணங்குபவனும் இங்கே உண்டு. விபச்சாரம்  செய்பவனும் உண்டு. சூதாடுபவனும் உண்டு. ஓரினச்சேர்க்கைக்கு கொடி பிடிப் பவனும் உண்டு. தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய சாய்பாபாக்களும் பிரேமானந்தாக்களும் இங்கே உண்டு. அதுமட்டுமின்றி வழி கெட்டுப்போவதற்குறிய அனைத்து வழிகள் நம் கைக்கெட்டும் தூரத்தில் உண்டு. இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு அல்லாஹ்வுக்கு பயந்து முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சொல்படி நடக்கின்றோமே அதனால்தான் நமக்கு நம்முடைய சமுதாய மக்களுக்கு அல்லாஹ் மிகப்பெரிய சிறப்பை வழங்கியுள்ளான் என்பதைபுரிந்துகொள்ளுங்கள்.

அல்லாஹ் உங்களை சோதிப்பது உங்களை மேன்மைபடுத்துவதற்காகவேயன்றி வேறில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் சகோதரர்களே !!!

அல்லாஹ் நம் அனைவரையும் தற்கொலையை விட்டும் பாதுகாத்து நேரான வழியில் செலுத்துவானாக! ஆமீன்.

வாழ்க்கை வாழ்வதற்கே !!!

– முஹம்மது சிராஜுத்தீன்

விண்கற்கள்

saritharam-kaddum-pugaipadangal_html_ef505c72பூமியை நோக்கி தினமும் விண்கற்கள் (Meteorite) விழுந்துகொண்டே இருக்கின்றன. அவை பூமியின் வளிமண்டலத்தைக் கடக்கும்போது எரிந்து சாம்பலாகி விடுகின்றன. மிகப் பெரிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது எரிந்தது போக மீதி பூமியைத் தாக்கி மிகப் பெரிய பள்ளங்களை (Crater) ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் மிகப் பெரிய மற்றும் மிகவும் பழமையான ஒரு பெரிய பள்ளத்தை ஆடம் கிரேட் (Grade) என்பவரின் தலைமையிலான குழு 2009 ஆம் ஆண்டு கண்டுபிடித்தது.

டென்மார்க் அருகே உள்ள கிரீன்லாந்து நாட்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது 100 கி.மீ. விட்டம் கொண்டது. சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின்மீது தாக்கிய விண்கல் மூலம் இந்தப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது என அங்கு கிடைத்த விண்கல் மாதிரிகளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர்.


இந்தப் பள்ளம் 100 கி.மீ. நீளமும், 7,857 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. ஆனால் விண்கல் விழுந்தபோது 500 கி.மீ. கொண்ட பள்ளமாக இருந்துள்ளது. மழை, பனி, காற்று, மண் அரிப்பு போன்ற பல்வேறு இயற்கை காரணங்களால் இப்பள்ளம் மூடப்பட்டு, சிறியதாக சுருங்கி உள்ளது. இது பூமியின் தரையிலிருந்து 25 கி.மீ. ஆழத்தில் உள்ளது. இந்த பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல் சுமார் 30 கி.மீ. அகலம் கொண்டதாக இருந்திருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது இது விழுந்திருந்தால் பூமியில் வாழும் உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பூமியின்மீது விழுந்த விண்கற்களிலேயே மிகப் பெரிய விண்கல் ஒன்று 1920ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நமீபியா நாட்டில் ஹோபா என்னும் விவசாயப் பண்ணையில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு ஹோபா விண்கல் (Hoba Meterorite) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விண்கல் 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், சுமார் ஒன்றரை மீட்டர் தடிமனும் கொண்டது. இதன் எடை 60 டன், இந்த விண்கல் சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விழுந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தட்டை வடிவத்தில் இருந்ததால் குறைவான வேகத்தில் பூமியின் மீது விழுந்துள்ளது. அதனால் பெரிய பள்ளம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விண்கல்லில் இரும்புத்தாதுகள் 82.4 சதவீதமும், நிக்கல் 16.4 சதவீதமும், கோபால்ட், பாஸ்பரஸ், செம்பு, துத்த நாகம், கார்பன், சல்பர், குரோமியம், இரிடியம், ஜெர்மனியம் போன்ற மூலகங்களும் சிறிதளவில் உள்ளன.

மேலும் பின்வரும் இறைவசனம் வின்கற்கள் பூமியில் விழுவதை உறுதிபடுத்துகின்றன.

இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.  

– அல்குர்ஆன் (7:84)

இந்த வின்கற்கள் இப்பொழுது பூமியில் ஏன் விழுவதில்லை ?

தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

– அல்குர்ஆன் (22:65)

– முஹம்மது சிராஜுத்தீன்

சூழ்நிலை கைதி

prison-1024x8541தன் இரண்டு குட்டிகளையும் காணாமல் தவித்தது தாய் ஆடு. தினமும் குட்டிகள் விளையாடும் இடத்துக்கு வந்தது. அங்கிருந்த காலடித் தடங்களைப் பார்த்தது. இரண்டு குட்டிகளின் காலடித் தடங்களும் காட்டுப் பக்கமாய் சென்றன. அங்குமிங்கும் தேடித்தேடி பார்த்தது. கடைசியாய் சிங்கத்தின் குகைக்குள் ஆட்டுக்குட்டிகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது. நல்லவேளை, சிங்கம் வேட்டைக்கு போயிருந்தது.

“சிங்கம் வந்தா நாம உயிரோட போக முடியாது. சொன்னாக் கேளுங்க…” என்று தாய் ஆடு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சிங்கம் கர்ஜிக்கும் குரல் கேட்டது.

“அடடா, சிங்கம் வாசலுக்கு வந்துவிட்டதே. இனி, ஓடி தப்பிப்பது கஷ்டம். வேறெதாவது செய்துதான் தப்பிக்க வேண்டும்…” என்று தாய் ஆடு யோசித்த அடுத்த கணமே, பலமாக குரலைச் செருமியது.

தன் குகைக்குள் ஏதோ புதிய குரல் கேட்டதும், சிங்கம் வாசலிலேயே தயங்கி நின்றது.

“ஏ…வீரக்குட்டிகளே. சிங்கக்கறி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இன்னும் சற்று நேரம் பொறுங்கள். எப்படியும் குகைக்கு சிங்கம் வரும். நான் ஒரு போடு போட்டால், சிங்கம் காலி. நீங்கள் ஆளுக்கு பங்கு போட்டு சாப்பிடலாம்…” என்று கட்டையான குரலில் காடே அதிரும்படிச் சொன்னது.

இதைக் கேட்டதும் சிங்கத்திற்கு உடல் வெலவெலத்துப் போனது. “நம் குகைக்கே தைரியமாக வந்து, நம்மை அடித்துத் தின்ன ஏதோ ஒரு புதுவிலங்கு வந்திருக்கிறது போலும்…’ என்றெண்ணி, மெதுவாய் பின்வாங்கி நடந்தது.

நடப்பதையெல்லாம் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த நரியொன்று சிரித்தபடியே சிங்கத்தின் அருகே வந்தது.

“ஏன் பயந்து ஓடுறே… உள்ளே இருப்பது புதுவிலங்கு இல்ல. ஆடுகள்தான். தைரியமாக போ…!” என்றது நரி.

சிங்கம் நம்பவில்லை. உடனே நரி, கயிறொன்றை எடுத்து சிங்கத்தின் வாலில் கட்டியது. மறுமுனையை தன் வாலில் கட்டிக் கொண்டது.

“இப்போதாவது நம்புகிறாயா…? தைரியமாக வா. நானும் உன்னோடு வருகிறேன்…” என்றபடி, சிங்கத்தை குகை நோக்கி அழைத்து வந்தது நரி.

இதைப் பார்த்த தாய் ஆடு சட்டென யோசித்து , இன்னும் குரலை பலமாய் உயர்த்தி, “வீரக்குட்டிகளா…நான் உங்களிடம் அப்பவே சொன்னேனே. நம்ம நரி மாமா எப்படியாவது ஒரு சிங்கத்தை, கயிறைக் கட்டியாவது இழுத்துக் கொண்டு வந்துவிடுவாரென்று. நாம் அடிக்கிற சிங்கத்தில் அவருக்கும் ஒரு பங்கு கொடுக்கணும்…சரியா…?” என்றது.

சிங்கம் நடுநடுங்கிப் போய் விட்டது.

“அடப்பாவி… நயவஞ்சக நரியே. உன்னோட ஒரு பங்குக்காக என்னைப் பலியிடப் பார்த்தாயே…அப்பாடி, நான் பிழைத்தேன்…” என்று தலைதெறிக்க சிங்கம் ஓட்டமெடுத்தது. கூடவே வாலைக் கயிற்றால் கட்டியிருந்த நரியையும் சேர்த்திழுத்துக்கொண்டு ஓடியது. சிங்கத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், நரி தரையில் விழுந்து இழுபட்டு உயிரை விட்டது.

இந்த கதையில் வரும் ஆட்டை போல நாமும் பல நேரங்களில் சூழ்நிலை கைதிகளாய் சிக்கி தவிக்கின்றோம். இது போன்ற ஒரு சிக்கலான ஒரு சூழ்நிலையை முஹம்மது நபி (ஸல்) எப்படி எதிர்கொண்டார்கள் என பார்க்கும்பொழுது ஆச்சரியம் மேலிடுகிறது.


உலகிலேயே மிகப் பெரும் வலிமையான சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ரோமானியர்கள் முஸ்லிம்களைத் தாக்க மூன்று இலட்சம் வீரர்களுடன் மதீனாவை நோக்கி படையெடுத்தார்கள். இதை கேள்வியுற்ற முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூவாயிரம் பேர் கொண்ட ஒரு படையை அனுப்பிவைத்தார்கள்.இதுவரை மதீனாவிலிருந்து புறப்பட்ட படைகளில் மிகப்பெரிய படை இதுதான்.

ரோமானியர்க்கெதிரான இப்படைக்கு ஜைத்(ரலி) அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஜைத்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டால் ஜாஃபர் இப்னு அபூதாலிப்(ரலி) அவர்கள் தலைமை ஏற்க வேண்டும். அவர்களும் வீரமரணமடைந்துவிட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் தலைமை தாங்க வேண்டும். அவர்களும் வீரமரணம் எய்தினால் இராணுவம் புதிய தளபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு இந்தப் படையை அனுப்பினார்கள்.

முஅத்தா என்னுமிடத்தில் போர் மூண்டது. இந்தப் போர் கி.பி. 629ம் ஆண்டில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிகழ்ந்தது. ஏழு நாட்கள் நீடித்த இந்த போரில் மூவாயிரம் பேர் கொண்ட முஸ்லிம்களின் சிறுபடை கிழக்கு ரோமானியப் பேரரசின் மாபெரும் இம்பீரியல் இராணுவத்தைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்துவிட்டது. நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகளும் வீரமரணம் அடைந்து விட்டார்கள். எனவே அவர்களுக்குப்பின் தேர்ந்தெடுக்கப் பட்ட தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் தலைமையில் படை மதீனாவுக்குத் திரும்பியது.

ரோமானிய சாம்ராஜ்யத்தின் இராணுவத்தை எதிர்கொள்ளும் தைரியத்தை இழந்து நேரடி மோதலைத் தவிர்க்க முஹம்மது நபி (ஸல்) விரும்பியிருந்தால் அவர்கள் மதீனாவை, எதிரியால் சூழப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருப்பார்கள். ரோமானிய இராணுவத்தை எதிர்கொள்ள கட்டளை பிறப்பித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இம்முடிவு அவர்களை ஒட்டுமொத்த அழிவிலிருந்து காப்பாற்றியது.

மேலே குறிப்பிட்டது போல நாம் அனைவரும் சூழ்நிலை கைதிகளே. சூழ்நிலை கண்டு அஞ்சி வாழ்பவன் தோல்வியையே தழுவுவான். எத்தகைய மோசமான சூழ்நிலை ஆயினும் அதனை சிறப்பாகக் கையாளத் தெரிந்தவன் அந்த மோசமான சூழ்நிலையை தனக்கு மிகச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி அடைவான்.

நம் அனைவரையும் வல்ல இறைவன் வெற்றியாளர்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக… ஆமீன்

– முஹம்மது சிராஜுத்தீன்

தன்னம்பிக்கை

804e31ea-bfd8-41e2-abdb-f95c7550f1c0ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

“ஏன் சோகமாக இருக்கிறீர்கள் ?” என்று கேட்டார்.

அதற்கு இவர் “எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன்” என்றார்.

“எவ்வளவு ரூபாய் நஷ்டம் ?” என்றார் அவர்.

“50 கோடி ரூபாய்” என்றார் இவர்.

“அப்படியா, நான் யார் தெரியுமா ?”  என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வந்தரின்பெ யரை சொன்னார்.

அசந்து போனார் இவர்…

“சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ?” என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர்; “ஆமாம் எல்லாம் சரியாகி விடும்”  என்றார்.

பின் அந்த செல்வந்தர் ஒரு காசோலை புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி “இந்தா இதில் 500 கோடிக்கு காசோலை, நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்” என்று சொல்லி விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த காசோலையை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார்.

“நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேலைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார்.

சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வந்தரை காணவில்லை.

“இவர் சென்று அந்த பெண்மணியிடம்  எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ?”  என்றார்.

“அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?” என்றார்.

இவர் “இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?” என்றார்.

அந்த பெண்மணி “இல்லை ஐயா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், காசோலை தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய காசோலையை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்.” என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை.

நீங்கள் மேலே படித்த கதையில் பிரச்சனைகளிலிருந்து மீண்டு வர காசோலை காரணம் என்பது போல் தெரிந்தாலும் அதன்மூலம் அவருக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கையே அவர்களுக்கு வெற்றியை தேடித்தந்தது. தன்னம்பிக்கைதான் நம் வாழ்க்கையை மாற்றித் தருகிறது என்பதை இக்கதை நமக்கு உணர்த்துகின்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை சிந்தித்துப்பாருங்கள் அவர்களின் தன்னம்பிக்கை எப்படி இருந்தது என்பதை பாருங்கள். நாற்பது வயதில் இறைவனிடமிருந்து இஸ்லாத்தை குறைஷிகளுக்கு எடுத்துச்சொல்ல கட்டளை வந்துவிட்டது. சாதாரண மனிதர்கள் அல்ல அவர்கள் காட்டுமிராண்டிகள். சண்டையிட்டுக் கொள்வதே வழக்கமாக இருப்பவர்கள். அதை பற்றியெல்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கவலைப்படவில்லை. தனி ஒரு நபராக ஸஃபா என்னும் குன்றின் மீது ஏறி நின்று ஒட்டுமொத்த குறைஷி மக்களைப் பார்த்து இஸ்லாத்தை எத்தி வைக்கிறார்கள். அம்மக்கள் சொல்லால் அடித்தார்கள் கல்லால் அடித்தார்கள். இன்னும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை மக்காவை விட்டே துரத்தினார்கள்.

சிறிதளவும் தன்னம்பிக்கை இலக்காத போராட்டம் எந்த மக்கள் மக்காவை விட்டு துரத்தினார்களோ அதே மக்காவை எந்த சண்டையுமின்றி கைப்பற்ற உதவியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் பத்ருப் போர்க்களத்தை எடுத்துக் கொள்ளுங்கள் 313 பேர் ஆயிரக்கணக்கில் இருந்த குறைஷியர்களை போரிட தயாரானார்களே அந்த ஸஹாபாக்களின் தன்னம்பிக்கை எவ்வளவு பெரியது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இறைவனிடமிருந்து ஸஹாபாக்களுக்கு வெற்றி நிச்சயம் என சுபசெய்தி வந்துவிட்டதே என்று கூட சிலர் நினைக்கலாம். ஆனால் அதற்கு முன்பு யூதர்களை இப்படி இறைவனுக்காக போர் செய்யுங்கள் என்று சொன்னபோது இறைவனுக்காக நாங்கள் ஏன் சண்டையிட வேண்டும் இறைவனையே சண்டையிடச் சொல்லுங்கள் என பின்வாங்கிய சம்பவத்தை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் இறைவன் பத்ருப் போரில் பங்கேற்றவர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தேவை . அந்த நம்பிக்கை, என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்,  என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும் . அப்படி இருந்தால் வெற்றி உங்களை தேடிவரும்.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால் தான். வெற்றியின் இரகசியம் “கடின உழைப்பு” என்ற சொற்களில் தான் அடங்கி இருக்கிறது.  தன்னம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம். சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும்.  முன்னேற்றத்தையும் தரும்.

வெற்றி பெறுவோம்’ என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்து விடாது செயலாற்றிக் கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக் கனியைப் பறிக்கமுடியும். தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. தன்னம்பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.

 – முஹம்மது சிராஜுத்தீன்