தேவைகளை பூர்த்தி செய்பவன் இறைவன்

1ஒரு நிறைமாத கர்ப்பிணி 48 கிலோ எடை இருக்கிறாள். தனது பிள்ளையை பெற்றெடுத்த பிறகு பிள்ளையுடைய 3 கிலோ குறைந்து 45 கிலோ என எடை குறைகிறாள். இதுதான் இயல்பு யதார்த்தம்.

மாமரத்தினுடைய விதை, அதன்மூலம் மாமரம் வளர்ந்து மாங்கனி நமக்கு கிடைக்கிறது. கருவுற்ற தாயின் வயிற்றில் குழந்தை இருந்ததைப் போல மா விதையினுள் மாமரம் இல்லை. அதுபோல ஆணினுடைய விந்தனுவில் இருந்து கரு உருவாகி குழந்தை பிறக்கிறது.ஆனால் அந்த விந்தனுவில் நீங்கள் குழ்ந்தையை பார்க்க முடியாது.

மா விதையினுள் மாமரம் இல்லாவிடினும் சரியே உங்கள் விந்தனுவில் குழந்தை இல்லாவிடினும் சரியே அல்லாஹ் மாமரத்தையும் அதன் மூலம் மாங்கனிகளையும், குழந்தையையும், உங்களுக்கு வாரிசையும் தருகின்றான்.


அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் – நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த்தக்க) அத்தாட்சி இருக்கிறது.

– அல்குர்ஆன் (16:11)

அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.

– அல்குர்ஆன் (27:60)

மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.

– அல்குர்ஆன் (36:77)

ஆக இவ்வுலகில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்பவன் இறைவனே என்பதை புரிந்து கொள்ளலாம். இதன் காரணமாகவே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உங்கள் கால் செருப்பினுடைய வார் அறுந்து போனாலும் இறைவனிடத்திலே கேளுங்கள் என்று சொன்னார்கள்.

மேலும் பின்வரும் வசனம் இறைவன் மற்ற அனைவரை விட மிகவும் சமீபமாக நம் அருகில் இருக்கிறான் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

– அல்குர்ஆன் (50:16)

ஒரு வகுப்பில் ஆசிரியர் கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கும் மாணவனிடம் புத்தகம் கேட்டால் அவரை நாம் பைத்தியக்காரன் என்று தானே சொல்வோம். இவர் ஏன் தனது அருகில் இருக்கும் முதல் வரிசை மாணவனை விட்டுவிட்டு தொலைவில் இருக்கும் மாணவனிடம் உதவி கேட்க வேண்டும் என்று தானே நினைப்போம்.

ஆக நமது பிடரி நரம்பைவிட மிக அருகில் இருக்கும் வல்ல இறைவனிடம் நாம் நமது தேவைகளையும், உதவிகளையும் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் ? மேலும் உதவி செய்பவர்களில் எல்லாம் மிகவும் நல்லவன் வல்ல இறைவன் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

(இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.

– அல்குர்ஆன் (3:150)

அதுமட்டுமின்றி அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு உதவி செய்பவர் யாருமில்லை. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?

– அல்குர்ஆன் (2:107)

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.

– அல்குர்ஆன் (3:160)

வல்ல இறைவனிடத்திலே நம் அனைத்து தேவைகளையும் கோரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அருள் புரிவானாக… ஆமீன்.

– முஹம்மது சிராஜுத்தீன்