உலகின் தலைசிறந்த சொல் செயல்

செயல்படுத்தப்படாத எந்த ஒரு சொல்லுக்கும் இவ்வுலகில் மதிப்பில்லை. தான் செயல்படுத்தாத எந்த ஒரு செயலை சொல்லும் மனிதனுக்கும் இங்கே மதிப்பில்லை.

ஆனால் பின்பற்றப் படாத வார்த்தைகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது நமது வாழ்க்கை. செயலில் இல்லாத சொற்களை எளிதில் உபதேசித்து விடுகிறோம். சொல்வதற்கு வார்த்தைகள் ஏராளம் உள்ளன. செய்வதற்கு நாம் இயலாதவர்களாக ஆகி விடுகிறோம்.

இதை திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

(குறள் எண்:664)

ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளியவாம்; சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் கடினம் ஆகும் என்பது இதன் பொருள்.

மதுவின் தீங்கு குறித்து பகலெல்லாம் உரையாற்றி விட்டு இரவில் மது அருந்துபவரின் மதிப்பு என்னவாக இருக்க முடியும்? பெண்ணுரிமை குறித்து முழங்கி விட்டு தனது மனைவியை அடிப்பவரின் மதிப்பு என்னவாக இருக்க முடியும்?

நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கின்றீர்கள், நேசிப்பதாய் அவளிடம் சொல்கின்றீர்கள் ஆனால் அவளது தேவையை பூர்த்தி செய்ய தவறும்போது மனைவியிடமிருந்து அன்பை எதிர்பார்க்க முடியுமா?

உங்கள் பிள்ளைகளின் மீது அதீத அன்பு செலுத்துகின்றீர்கள் ஆனால் ஒரு தந்தையாக உங்கள் கடமையை செய்ய மறுக்கும் உங்களை உங்கள் பிள்ளைகள் மதிப்பார்களா?

உங்கள் மனைவியை நீங்கள் எவ்வளவு நேசித்தாலும், உங்கள் பிள்ளைகளின் மீது எவ்வளவு அன்பு செலுத்தினாலும் அவர்கள் மீதான உங்கள் கடமையை நீங்கள் செயல்படுத்தும்போது மட்டுமே உங்களின் நேசம் உங்களின் அன்பு புரிந்து கொள்ளப்படுகிறது. இல்லையேல் கைசேதமே…

இது போலவே ஒரு முஸ்லிம் என்பவன்

“லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹுவின் திருத்தூதர் ஆவார்கள்.

என சொல்லி அதை முழு மனதாக ஏற்க வேண்டும்.

மேலும் தான் சொன்ன கலிமாவை உண்மைபடுத்தும் விதமாக ஒவ்வொரு முஸ்லிமும்

1) அல்லாஹ்வை வணங்கவும், அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருக்கவும் வேண்டும்.

2) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும்.

3) கடமையான ‘ஸக்காத்’ (ஏழை வரி) வழங்க வேண்டும்.

4) ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்.

5) வசதி படைத்தோர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன செயல்களே நாளை மறுமையில் இறைவனிடத்திலே நீங்கள் முஸ்லிம் என்பதாக சாட்சி பகரும். மாறாக செயல்படுத்த தவறிய நீங்கள் ஒரு முஸ்லிம் என சொன்னாலும் அதற்கு உரித்தான எந்த செயலும் இல்லாதபோது இறைவன் முன் கைசேதமே.

வல்ல இறைவன் நம் அனைவருக்கும் கலிமாவை மொழிந்து அதன்படி நடக்கக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக…..

– முஹம்மது சிராஜுத்தீன்

ஓ கஃபாவே !!!

1

உனக்குத்தான் எத்தனை சிறப்பு. உலகின் அனைத்து முஸ்லிம்களும் தொழுகையின்போது உன்னை நோக்கியே தொழுகின்றனர். நிற இன பேதமின்றி ஏழை பணக்காரன் பேதமின்றி உன்னை நோக்கி வருகின்றனர்.

நீ வல்ல இறைவனால் அபய பூமி என்றும் அறிவிக்கப்பட்டாய்.அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் நீ இன்றளவும் அபயபூமியாகவே இருக்கிறாய். 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் நீ இருந்து வருகிறாய்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ”ஹஸ்வா” என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக நீ அமைந்திருக்கும் மக்காவை நோக்கி, ”நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)” என்று கூறினார்கள்.

-அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) (திர்மிதீ 3860).

மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், உன் சிறப்பை உறுதிபடுத்துகின்றன.

மேலும் அபீஸீனிய மன்னனின் ஆட்சியில் ஏமன் நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த ஆப்ரஹா என்பவன் கி.பி. 571-ல் பிரமாண்டமான யானைப் படை ஒன்றைத் தயார் செய்து உன்னை இடிப்பதற்காக அனுப்பிவைத்தான், அதை அழிப்பதற்காக அபாபீல் என்ற பறவைகளின் சொண்டுகிளில் சூடேற்றப்பட்ட கற்களை கவ்விக்கொண்டு வரச் செய்து, அந்தப்படையை மெண்டு துப்பிய வைக்கோலைப்போல் அல்லாஹ் ஆக்கினான்.

இங்கு என்னால் ஒரு கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. உனக்கு ஏன் இத்தனை சிறப்பு. படைத்த இறைவனே உன்னை நேரடியாக பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன ?

உண்மையை சொல்வதென்றால் நீ கற்களால் கட்டப்பட்ட ஒரு சாதாரண கட்டிடம். எந்த ஒரு பொறியாளருடைய உழைப்பும் சிந்தனையும் தேவைப்படாத ஒரு சதுர வடிவிலான கட்டிடம். இன்னும் உன்னைச்சுற்றி பலநூறு மாடிகள் கொண்ட அழகான கட்டிடங்கள் இருக்க உனக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு ?

உலக மக்கள் அனைவரும் உன்னை நோக்கி தொழுவதினாலா ? அனைத்து மக்களை நீ அரவணைத்துக்கொள்வதினாலா ? நீ அபயமளிக்கப்பட்ட பூமி என்பதினாலா ? நிச்சயம் இவை மட்டுமே உன் சிறப்புக்கு காரணமாக இருக்கவே முடியாது..

இந்த கேள்விக்கு விடைதேடி நான் பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஒரு வரலாற்று பயணம் மேற்கொள்கிறேன்.

இப்பொழுது நீ இருக்கும் அதே இடம் ஆனால் அது யாருமில்லா பாலைவனம். மனிதர்கள் வாழ தகுதியற்ற பாலைவனம். ஆதம் (அலை) அவர்கள் காலத்திலேயே நீ கட்டப்பட்டுவிட்டாய் என்றபோதினும் உனக்கு இப்பொழுது இருக்கும் சிறப்பு அப்பொழுது இல்லை. ஒருவர் தன் மனைவி மற்றும் பிறந்து சிறிது நாட்களேயான தன் குழந்தையுடன் நீ இருக்கும் இடத்தை நோக்கி வருகிறார். பல ஆண்டு குழந்தை பாக்கியமில்லாமல் இறைவனிடம் வேண்டி பெற்ற குழந்தை அது.

இறைவனிடத்தில் இருந்து செய்தி இல்லை கட்டளை. உன் மனைவியையும் குழந்தையையும் யாருமே வாழாத வாழமுடியாத இந்த பாலைவனத்தில் விட்டுச் செல். எந்த ஆண் மகனுக்கும் செய்ய இயலாத ஒரு செயல். ஆனால் வேறு வழியில்லை இறைவனின் கட்டளை ஆயிற்றே. அவர் அவ்வாறே செய்கிறார்.பின் இறைவனிடம் பின்வருமாறு துஆ செய்கிறார்.

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்.) மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்.

-அல்குர்ஆன் (14 : 37)

இறைவனின் கட்டளை என்பதால் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மனைவி ஹாஜிரா (அலை) இதை ஆட்சேபிக்காமல் ஏற்றுக்கொள்கிறார். யாருமே வாழமுடியாத இடமாக இருந்தால் என்ன, பாதுகாப்பளிப்பது இறைவன் அல்லவா. ஆனால் அவ்வளவு எளிது அல்லவே பாலைவனத்தில் வாழ்வது. தன் சிறு குழந்தைக்கு தண்ணீர் தாகம், அழ ஆரம்பித்துவிட்டது. பெற்ற தாய் துடியாய் துடிக்கிறார். இந்த பாலைவனத்தில் நான் தண்ணீருக்கு எங்கே செல்வேன். அதோ தென்படுகிறது தண்ணீர் ஓடுகிறார் அது காணல் நீர் என்பதை அறியாமல். ஸஃபா என்னும் குன்றிலிருந்து மர்வா என்னும் குன்றுவரை ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஏழுமுறை.அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உதவி புரிந்தான்.

ஆம் அல்லாஹ்வின் உதவி ஹாஜிரா (அலை) அவர்களுக்கு கிடைத்தேவிட்டது. பாறைகள் நிறைந்த தண்ணீருக்கு வழியே இல்லாத பாலைவனத்தில் நீரூற்றை ஓடச் செய்தான் வல்ல இறைவன். ஜம்ஜம் என்னும் இந்த நீரூற்று மக்கள் குடியேறும் இடமாக சிறிது சிறிதாக மாற உதவி புரிந்தது.

ஆனால் சோதனை மட்டும் முடிந்தபாடில்லை. இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மீண்டும் இறைவனிடமிருந்து சோதனை,தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை இறைவனுக்காக நரபலி கொடுக்குமாறு கட்டளை. அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஷைத்தான் எவ்வளவோ இதை தடுக்க முயற்ச்சி எடுத்தும் பயனில்லை. கல்லால் அடிவாங்கியது மட்டுமே மிச்சம்.

வானவரின் தூதர் ஜிப்ரையில் (அலை) அவர்களை அனுப்பி இப்ராஹீம் (அலை) மகனை பலியிடுவதை தடுத்தான் இறைவன். நீ கண்ட கனவை நிறைவேற்றி விட்டாய். எம்முடைய சோதனை அனைத்திலும் வெற்றி அடைந்து விட்டாய் என்று அல்லாஹ் கூறினான். இப்ராஹீம் (அலை) மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அல்லாஹ் பலியிட கட்டளையிட்டான்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார்.அச்சமயம் நாம் “இப்ராஹீமே!” என அழைத்து, உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்” என்றும் கூறி, “நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்” (என்றும் கூறினோம்).ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

-(அல்குர்ஆன் 37:103,104,105,106,107)

மேலும் வல்ல இறைவன் இப்ராஹீம் (அலை) அவர்களை பாராட்டி மக்களின் இமாமாகவும் (தலைவராகவும்) ஆக்கினான்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் சேர்ந்து கஃபாவாகிய உன் அடித்தளத்தை உயர்த்தி

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”

“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

“இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக”

என இறைவனிடம் துஆ மூலம் வேண்டினார்கள்.வேண்டுகோள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டது.

(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.

(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் – அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”

-(அல்குர்ஆன் 2:125,126)

காலங்கள் உருண்டோடின உன்னை ஓர் இறை கொள்கைக்காக கட்டிய இப்ராஹீம் (அலை) அவர்கள் இருந்திருந்தால் துடித்து போயிருப்பார். ஆம் ஓர் இறை வழிபாட்டிற்காக கட்டப்பட்ட உன்னுள் பல சிலைகள் கடவுள் என்னும் பெயரால். கொடுமையிலும் கொடுமை யாதெனில் உன்னை வல்ல இறைவனுக்காக கட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களும் கடவுளின் சிலையாய் மற்ற சிலைகளுடன் நின்றுகொண்டிருந்தார்.

சத்தியத்தை எடுத்துச்சொல்ல ஓர் இறை கொள்கையை நிலைநாட்ட உனது மக்கமா நகரிலேயே உதித்தார் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். உண்மையை உறக்க சொன்னதற்காக ஊரைவிட்டே விரட்டப்பட்டார்.சோர்ந்துவிடவில்லை பெரும்படையுடன் நீ இருக்கும் மக்கா நகரை வெற்றியும் கண்டார். உன்னிடத்திலே இருந்த அனைத்து சிலைகளையும் அப்புறப்படுத்தினார்.நீ எதற்காக கட்டப்பட்டாயோ அதனை நிறைவேற்றினார்.

ஆனாலும் அதுவரை முஸ்லிம்கள் உன்னைவிடுத்து பைத்துல் முகத்தஸையே கிப்லாவாக முன்னோக்கி தொழுதுகொண்டிருந்தார்கள். ஆனால் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கோ உன்னை கிப்லாவின் திசையாக நோக்கி இறைவனை வணங்க ஆசை.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆசையல்லவா, நிறைவேறாமல் இருக்குமா?

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.

-(அல்குர்ஆன் 2:144)

ஆக இந்த மாபெரும் வரலாற்று பயணத்தின் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகம் மற்றும் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆசையுமே கஃபாவாகிய உன் சிறப்புக்கு காரணம் என்பதை அறிந்துகொண்டேன்.

“வரலாறு தெரியாத சமுதாயம் நிலைக்காது” என்று சொல்லுவார்கள். இவ்வுலகில நீ இருக்கும்வரை உன்னை நோக்கி மக்கள் வருவது நிற்கும்வரை இஸ்லாமிய வரலாறு அழியாது இஸ்லாமும் அழியாது என்பதை நிச்சயம் நான் அறிவேன்.

உன்னைப்போல சிறப்பு பெறவேண்டும் என எனக்குள்ளும் ஓர் ஆசை. ஆனால் என்னால் நிச்சயம் இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செய்தது போலெல்லாம் இறைவனுக்காக தியாகம் செய்திடமுடியாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விற்காக அல்லாஹ்வை நேசித்தார்கள். நானோ சுவர்க்கம் வேண்டும் என்பதற்காகவும் நரகம் வேண்டாம் என்பதற்காகவும் அல்லாஹ்வை நேசிக்கின்றேன்.

ஆகையால் ஹாஜிரா (அலை) அவர்கள் தன்னந்தனியாக பாலைவனத்திலே ஓடியது போல அதே இடத்தில் குளிர்சாதன வசதியுடன் மக்களுடன் மக்களாக கையில் தண்ணீரையும் ஏந்திக்கொண்டு ஹாஜிரா (அலை) ஓடியது போல ஓடி நடிக்கிறேன். இறைவனுக்காக என் பிள்ளையை பழிகொடுக்க மாட்டேன் என தெரிந்தும். யா அல்லாஹ் நீ ஆட்டை குர்பானி கொடுக்க சொன்னாய். இல்லையெனில் நான் என் மகனை உனக்கு குர்பானி கொடுத்திருப்பேன் என்பதாக நடித்து ஆட்டை பழியிடுகிறேன்.மேலும் அதிகம் அதிகம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுகின்றேன்.

இப்படியெல்லாம் செய்தாலாவது வல்ல இறைவன் என் துஆவை ஏற்றுக்கொள்ள மாட்டானா என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த பாவியாகிய நானும் சுவனம் செல்லவேண்டும் என ஆசை கொண்டுவிடமாட்டார்களா என்றும் கனா காண்கின்றேன்.

– முஹம்மது சிராஜுத்தீன்

 

இஸ்லாமியக் கல்வியா? உலகக் கல்வியா?

1இஸ்லாமியக் கல்வியா? அல்லது உலகக் கல்வியா? இதை ஒரு ஆலிமிடம் நீங்கள் கேட்டால் அவர் சட்டென இஸ்லாமியக் கல்வியென்று பதில் சொல்வார். ஆனால் இந்த விடை நிச்சயமாக தவறு.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இருவிதமான கல்வி என்ற பாகுபாடே கிடையாது.இஸ்லாமியக் கல்வியும் சரி உலகக் கல்வியும் சரி சமமே. இந்த பாகுபாடு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இருந்திருக்கவில்லை. இது பிற்பாடு மாற்றுமதத்தவர்களால் குறிப்பாக மேற்கத்தியர்களால் தோற்றுவிக்கப்பட்டது.எதற்காக இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக!

ஆங்கிலத்திலே ஒரு வாக்கியம் உண்டு “Give to Caesar what is Caesar’s and to God what is God’s” அதாவது “அரசருக்கு கொடுப்பதை அரசருக்கு கொடு கடவுளுக்கு கொடுப்பதை கடவுளுக்கு கொடு”.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவழிபாடு, மதம், அரசியல், குடும்பம் என அனைத்துமே ஒன்றுதான். இதன் காரணமாகவே இஸ்லாம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகும் மிக வேகமாக அதுவும் ஒவ்வொரு நாட்டிலும் இஸ்லாமிய ஆட்சி நடைபெறக் கூடியளவு வளர்ந்தது.

இதை நன்கு உணர்ந்த மேற்கத்தியர்கள் முஸ்லிம்களை இதுபோன்ற நிலையில் நிச்சயம் வெற்றிகொள்ள முடியாது என முடிவு செய்து அவர்கள் செய்த குழப்பமே இன்று நாம் இஸ்லாமியக் கல்வியா உலகக் கல்வியா என்று பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் கல்வியை பிரித்துப் பார்த்ததின் விளைவு இன்று அனைத்து துறையிலும் எந்தவித முன்னேற்றமின்றி தவிக்கிறோம்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போரிலே சிறை பிடிக்கப்பட்ட கைதிகளை தங்களுக்கு தெரிந்த கல்வியை தம் மக்களுக்கு கற்றுக்கொடுக்கச் சொல்லி விடுவித்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சற்று சிந்தித்து பாருங்கள் காபிர்களிடம் மார்க்கக் கல்வியா அந்த ஸ்ஹாபாக்கள் கற்றிருப்பார்கள்.

சீனா சென்றாயினும் கல்வியை பயின்றுகொள் என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களே அதுவும் என்ன மார்க்கக் கல்வியை கற்கவா? முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட வேறு யாரிடம் அந்த ஸஹாபாக்கள் மார்க்கம் பயிலப்போகிறார்கள்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை நாம் புரட்டிப்பார்த்தோமேயானால் நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும். வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் யூதனால் கழுத்தை நெறிக்கப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் சந்திரனை இரண்டாக பிளந்து காட்டினார்கள் என்பதை நம்மால் மறுக்க முடியுமா?

அகல்போரின் போது ஸஹாபாக்கள் தங்களது வயிற்றிலே ஒரு கல்லை கட்டிக் கொண்டு அகல் தோண்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கற்களை கட்டிக்கொண்டு அகல் தோண்டினார்களே அந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் புராக் வாகனத்திலே விண்ணுலகப் பயணம் சென்றார்கள் என்பதை நம்மால் ம்றுக்க முடியுமா?

அனைத்திற்கும் மேலாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெற்ற மக்கா வெற்றியைச் சிந்தித்துப்பாருங்கள். இஸ்லாத்தை எத்தி வைத்ததற்காக தங்களை கல்லால் அடித்தவர்கள், தங்களை ஊரை விட்டே துரத்தியவர்கள், மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை வருகிறது என்று தெரிந்து ஓடி ஒழிந்து கொண்டார்கள். எந்தவித சண்டையும் இல்லாமல் மக்கா வெற்றிகொள்ளப்படுகிறது.

வெற்றிகொண்டுவிட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து குறைஷிகளையும் மன்னித்தார்கள் என்பதை எந்த சரித்திர ஆய்வாளர்களும் ஆச்சரியத்துடன் குறிபிட மறந்ததில்லை.இது உலக சரித்திரத்தில் எங்கும் நடந்ததில்லை நடக்கப்போவதுமில்லை என்பதே உண்மை. அன்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தனை மக்காவாசிகளையும் கொன்று குவித்திருக்கலாம் ஆனால் இஸ்லாம் வளர்ந்திருக்காது.

இதன் மூலம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இஸ்லாம் உலகம் என்று எதையுமே பிரித்துப்பார்த்ததில்லை என்பதை நாம் உணர முடியும். அதன் காரணமாகவே பிற்காலத்தில் இஸ்லாம் மத்திய ஆசியா முழுவதும் பரவிற்று என்பதை யாரும் மறுக்க முடியாது.

இப்பொழுது இன்று நாம் இஸ்லாமியக் கல்வி உலகக் கல்வியென்று பிரித்துப்பார்ததினால் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை பாருங்கள். பெற்ற மகனை கணிப்பொறி விஞ்ஞானியாக படிக்கவைத்தோம் ஆனால் இஸ்லாத்தை விட்டுவிட்டொம் விளைவு நிறைய சம்பாதிக்கிறான் ஆனால் பப் என்றும் டிச்கோ என்றும் சுற்றி வாழ்க்கையை இழந்து நிற்கக்காண்கிறோம். பெற்ற மகளை கல்லூரியிலே படிக்க வைத்தோம் இஸ்லாத்தை விட்டுவிட்டோம் விளைவு யாரோ ஒரு காபிருடன் குடும்பம் நடத்தும் இழிநிலையை காண்கின்றோம்.

சரி இதுதான் இப்படி மார்கக்கல்வி பயின்றவர்களாவது நன்றாக இருக்கிறார்களா என்றால் நிச்சயம் அதுவுமில்லை. ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஜமாத் கடிதத்தை கொடுத்து என் பெண் பிள்ளைக்கு கல்யாணம் உதவி செய்யுங்கள் என்று கையேந்த விட்டுவிட்டோம்.

சற்று சிந்தித்த்ப்பாருங்கள் சகோதரர்களே உங்களுடைய பிள்ளை கணிப்பொறி விஞ்ஞானியாக அதே சமயம் மார்க்கமும் தெரிந்திருந்தால் நிச்சயம் பப், டிஸ்கோ என்று வாழ்க்கை சீரழிந்திருக்குமா? உங்கள் பெண் பிள்ளை காபிருடன் ஓடிப்போகும் இழிநிலைதான் ஏற்பட்டிருக்குமா? அதுபோல இமாம்கள் உலகக் கல்வி பயின்றிருந்தால் இப்படி கையேந்தும் நிலைதான் ஏற்பட்டிருக்குமா?

ஆகவே இனிமேலாவாது நாம் அனைவரும் உலகக் கல்வி இஸ்லாமியக் கல்வி என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்தையும் கற்று அல்லாஹ்வும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன வழிமுறைப்படி வாழ ஏக இறைவன் அருள் புரிவானாக.ஆமீன்.

– முஹம்மது சிராஜுத்தீன்

இறைவன் மனிதனை எதற்காக படைத்தான் ?

1எதற்காக மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டோம். இந்த கேள்வி அனைத்து மனிதனுக்கும் ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பதிலை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் பதில் திருப்திகரமானதா என்றால் பெரும்பாலும் கேள்விக்குறியே.

முஸ்லிமாகிய நாம் அல்லாஹ்வை வணங்குவதற்காக என்று சொல்வோம். ஆனால் எதற்காக அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று கேட்டால் கேள்வியே பதிலாக வரும்.

இதை ஒரு மேற்கத்திய நபரிடம் கேட்டால் அவர் இவை அனைத்தும் பரிணாம வளர்ச்சியே (Evolution) என்பார். மாடுகள், நாய்கள் எதற்காக படைக்கப்பட்டன, எந்த ஒரு நோக்கமுமில்லை. அது போலவே மனிதன் படைக்கப்பட் டதும் எந்த ஒரு நோக்கத்திற்காகவுமில்லை என்று சொல்வார்.

இறைவன் ஏன் மனிதனை படைக்க வேண்டும் என்ற கேள்வி வருவதற்கு முன் இறைவன் எதற்காக படைக்கிறான்? என்ற கேள்வியும் வரவே செய்கிறது.

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

-அல் குர் ஆன் (40:57)

இந்த இறைவசனம் மூலம் நமக்கு இறைவன் இந்த வானத்தையும் பூமியையும் படைத்தான், அந்த படைப்பு மனிதர்களைவிட சிறந்ததென்று தெரிய வருகிறது. ஆகவே இறைவன் ஏன் படைக்கிறான் என்ற கேள்வி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

அவன்தான் அல்லாஹ் – உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் – இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

-அல் குர் ஆன் (6:102)

அல்லாஹ் மிகத்தெளிவாக இந்த வசனத்திலே அவனே படைப்பாளன் என்று கூறுகிறான்.

அல்லாஹ் தன்னை ஹாலிக் (படைப்பாளன்) என்று கூறிக்கொள்கிறான். அதை மனிதர்களாகிய நாம் உணர்வதற்காக அனைத்தையும் படைக்கிறான்,படைத்துக்கொண்டே இருக்கிறான்.

அல்லாஹ் படைக்கிறான் சரி. இதிலென்ன அதிசயம் இருக்கிறது மனிதன் கூடத்தான் படைக்கிறான் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லக்கூடும். அல்லாஹ்வின் படைப்பிற்கும் மனிதனுடைய படைப்பிற்கும் உள்ள வித்தியாசத் தையும் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுடைய படைப்பு என்பது ஏற்கனவே இந்த உலகத்தில் இருக்கக் கூடிய பொருளை வேறு ஒரு பொருளாக படைப்பது. இரும்பைக்கொண்டு screw (ஸ்குரூ) தயார் செய்வது,இரும்பை மனிதனால் தயார் செய்ய முடியாது. கல்லைக் கொண்டு சிலையை தயார் செய்வது, கல் உடைத்து எடுக்கப்படும் பாறையை மனிதனால் தயார் செய்ய முடியாது. ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பு என்பது ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றை படைப்பது.இந்த பிரபஞ்சம் எப்படி படைக்கப்பட்டதோ அதுபோல (Big Bang Theory).

இங்கே மற்றொரு முக்கியமான விஷயத்தை அனைவரும் கவனிக்க வேண்டும்.எப்படி ஒரு சிலையை பார்த்து நாம் சிற்பியை தெரிந்து கொள் கிறோமோ, ஒரு ஓவியத்தை பார்த்து ஓவியரை தெரிந்து கொள்கிறோமோஅதுபோல இறைவனின் படைப்புகளை பார்த்து நாம் இறைவனை உணர்ந்து கொள்கிறோம் அவ்வளவே.

சிலையை பார்த்து சிற்பியை தெரிந்து கொள்வதனால் சிலை நிச்சயம் சிற்பியாகிவிட முடியாது. ஓவியத்தை பார்த்து ஓவியரை தெரிந் து கொள்வதனால் ஓவியம் ஓவியராகிவிட முடியாது.சிற்பி சிற்பிதான் சிலை சிலைதான்.ஓவியர் ஓவியர்தான் ஓவியம் ஓவியம்தான். அதுபோல அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகளும் நமக்கு அல்லாஹ்வை அவனின் ஆற்றலை உணர்த்துகின்றன. ஆனால் படைக்கப்பட்ட எந்த பொருளும் அல்லாஹ் ஆக முடியாது.

உங்களில் நீங்கள் அல்லாஹ்வை உணருகிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் திடமான கை கால்களை கொடுத்திருக்கிறான். நல்ல கண் பார்வையை கொடுத்திருக்கிறான். யாருடைய உதவியுமில்லாமல் உங்களுடைய உடல் இயக்கம் அழகாக இயங்குகிறது. இங்கே உங்களில் நீங்கள் அல்லாஹ்வை உணருகிறீர்கள் அவனது படைப்பின் ஆற்றலை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒருகாலும் அல்லாஹ் ஆகிவிட முடியாது.

இறைவன் ஏன் படைக்கிறான் என்பது நமக்கு இப்பொழுது புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.

இறைவனை எதற்காக வணங்க வேண்டும்?

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

-அல் குர் ஆன் (51:56)

அல்லாஹ் குர் ஆனிலே மிகததெளிவாக சொல்கிறான் மனிதர்கள் தன்னை வணங்குவதற்காக மட்டுமே படைத்தேன் என்று.

மனிதன் எதற்காக இறைவனை வணங்க வேண்டும்? – நியாயமான கேள்விதானே.

நான் படித்தேன், நான் வேலை தேடினேன், நான் வேலை பார்த்தேன், நான் என் குடும்பத்தை காப்பாற்றுகிறேன். ஒரு வேலை சாப்பாடு என்றாலும் நான் சம்பாதித்துதான் சாப்பிட்டாக வேண்டும். அப்படியிருக்க நான் ஏன் இறைவனை வணங்க வேண்டும். நியாயமான கேள்விதானே.

நமது உடலிலே 43 ஜொடி நரம்புகள் நம்மை செயல்பட வைக்கின்றன. நமது உடம்பிலுள்ள நரம்புகள் அத்தனையும் வெளியில் எடுத்து ஒரே நேர் கோட்டிற்கு கொண்டு வருவோமேயானால் அது 1,00,000 மைல்கள் நீண்டு கொண்டேசெல்லும் என்பது அறிவியல் உண்மை. நமது பூமியினுடைய சுற்றளவு வெறும் 25000 மைல்கள் மட்டுமே. நமது நரம்புகளை வைத்து இந்த பூமியை 4 முறை சுற்றி வந்துவிடலாம்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 8000 மைல்கள். இந்த பயணத்திற்காக எத்தனை பாதுகாப்புகள், ஏற்பாடுகள் அப்படியிருந்தும் சில நேரங்களில் விமானம் விபத்துக்குள்ளாகி அத்தனைபேரும் உருத்தெரியாமல் போய்விடுவதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம். அப்படியிருக்க நமது அமெரிக்க பயணத்தைவிட பலமடங்கு பெரியதான நமது நரம்புகள் யாருடைய உதவியுமின்றி அழகாக செயல்படுகிறதே. இதற்காக நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டாமா?

ஒருவர் மருத்துவமனையிலே சிறுநீர் வெளியாகவில்லையென அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு சிறுநீர் வெளியாக வேண்டுமென்று இலட்சக்கணக்கில் செலவு செய்து மருத்துவர்கள் அவர் சிறுநீர் வெளியாக உதவி செய்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவருக்கோ ஒவ்வொறு முறை சிறுநீர் வெளியேற்றப்படும்போதும் உயிர்போகிற வலி. அதற்காக மருத்துவரை திட்டமுடியுமா. திட்டினால் பைத்தியக்காரன் என்றுதானே சொல்லுவோம்.

இலட்சக்கணக்கில் செலவு செய்தும் மருத்துவரால் வலி இல்லாமல் சிறுநீரை வெளியேற்ற முடியவில்லை. ஆனால் ஆயுல் முழுவதும் எந்தவித வலியுமின்றி உனக்கு சிறுநீர் வெலியாகின்றதே அதற்காக நீ இறைவனை வணங்க வேண்டாமா?

ஒருவரின் மர்ம உருப்பிலிருந்து இரத்தம் வடிகிறது மிகப்பெரிய துன்பம். ஆனால் அதே மர்ம உருப்பிலிருந்து விந்து வெளியாகும்பொழுது நமக்கு இன்பமாகத்தானே இருக்கிறது. வருகிற இடம் என்னவோ ஒன்றுதான். அது விந்தாக இருந்தால் இன்பம். இரத்தமாகயிருந்தால் துன்பம். நமக்கு இன்பத்தை தருகின்ற அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நாம் அந்த இறைவனை வணங்க வேண்டாமா?

– முஹம்மது சிராஜுத்தீன்